புதிய பாதையை நோக்கி சிங்கப்பூர்

புதிய பாதையை நோக்கி சிங்கப்பூர்

3 mins read
c327b5dd-6dc5-4750-a9b3-9d3c0836aeec
பிரதமர் லாரன்ஸ் வோங் வரவுசெலவுத் திட்டத்தை வியாழக்கிழமை (பிப்ரவரி 12) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிச்சயமற்ற உலகச் சூழலில் சிங்கப்பூர் தடம் புரளாமல் முன்னேறுவதற்கான ஒரு திசைகாட்டியாக 2026ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் அமைந்துள்ளது.

பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை, நாட்டின் எதிர்கால உத்திகளைப் புதுப்பிப்பதற்கான முதல்படியாகும். சவால்கள் நிறைந்த பாதையில் சிங்கப்பூர் எவ்வாறு தன்னைத் தற்காத்துக்கொண்டு வளர்ச்சியடையும் என்பதற்கான தெளிவான வரைபடத்தை இது வழங்கியுள்ளது.

இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சமாகச் ‘செயற்கை நுண்ணறிவு’ தொழில்நுட்பம் முன்னிறுத்தப்பட்டுள்ளது. எதிர்கால வளர்ச்சியின் முக்கிய அங்கமாக செயற்கை நுண்ணறிவை அரசாங்கம் கருதுகிறது.

இதற்காக ‘தேசிய செயற்கை நுண்ணறிவு மன்றம்’ உருவாக்கப்படுவதும் அதற்குப் பிரதமரே தலைமை தாங்குவதும் இந்தத் தொழில்நுட்பத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. உற்பத்தி, நிதி, சுகாதாரம் மற்றும் இணைப்புத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் பெருமாற்றங்களைக் கொண்டுவருவதே இதன் நோக்கம்.

நாட்டின் அனைத்துக் குடிமக்களும் இதில் பங்கெடுக்க அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிகளை மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு உயர்தர செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை (Premium AI tools) இலவசமாகப் பயன்படுத்த வசதி செய்யப்படும்.

நிறுவனங்களும் ஊழியர்களும் இந்த மாற்றத்திற்கு எந்த அளவுக்கு தயாராகிறார்கள் என்பதிலேயே, சிங்கப்பூர் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மையமாகும் இலக்கின் வெற்றி உள்ளது.

தொழில்நுட்பத்தைத் தாண்டி, மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான வாழ்க்கைச் செலவின உயர்வு, நடுத்தர வயது ஊழியர்களுக்கான ஆதரவு, உள்ளூர் வணிகங்கள் வெளிநாடுகளில் விரிவடைவதற்கான திட்டங்கள் எனப் பல்வேறு ஆதரவுகளை இந்த வரவுசெலவுத் திட்டம் மேற்கொண்டுள்ளது.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பசுமை ஆற்றல், கரிம வெளியீட்டைக் குறைக்கும் முயற்சிகள், நிலையான நகர்ப்புற வளர்ச்சி போன்ற துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கப்படுகின்றன. இதனை பொருளியல் வளர்ச்சியை நோக்கிய முயற்சியாக மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கான பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் செயல்திட்டமாகவும் கருதலாம்.

புவிசார் அரசியல் பதற்றங்கள் மிகுந்த இப்போதைய சூழலில் மத்தியில் நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் காக்கும் முயற்சியாகவும் இந்த வரவுசெலவுத் திட்டம் பார்க்கப்படுகிறது.

குறுகியகால இடர்தணிப்புகளுக்கும் நீண்டகால மாற்றுத் திட்டங்களுக்கும் இடையிலான சமநிலையை பேணுவதன் மூலம், எதிர்காலத் தலைமுறையினர்க்கும் வாய்ப்புகள் நிறைந்த சிங்கப்பூரை உருவாக்கும் நோக்கத்தை இத்திட்டம் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

தொழில்முனைவோர்க்கான ஊக்குவிப்பும் ஆய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடும் சிங்கப்பூரை அறிவுசார் பொருளியலாக மேலும் வலுப்படுத்தும்.

உலகச் சந்தையின் மாற்றங்களை விரைவாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறனே சிங்கப்பூரின் உண்மையான வலிமை.

சுருக்கமாகச் சொன்னால், 2026 வரவுசெலவுத் திட்டம் என்பது வெறும் எண்களின் தொகுப்பன்று; அது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு வலுவான சிங்கப்பூரை உருவாக்குவதற்கான அடித்தளமாகும்.

இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு நாம் நமது அளவையும் எண்ணிக்கையையும் தாண்டிச் சாதிக்க வேண்டிய தருணம் இது.

குறிப்பாக, இந்தியச் சமூகம் போன்ற துடிப்பான சமூகங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு தங்கள் வேலைவாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்வதோடு, நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்க வேண்டும்.

அரசாங்கத்துடன் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு சமூக அமைப்பும் இந்தப் பயணத்தில் பங்கெடுத்தால்தான் ‘புதிய பாதை’ உண்மையான முன்னேற்றப் பாதையாக மாறும்.

குறிப்புச் சொற்கள்