சொந்த மண்ணையும் உற்றார் உறவினரையும் பிரிந்து, நம்பிக்கையோடு சிங்கப்பூர் வந்து வியர்வை சிந்தி உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்போது அது சமூகத்தின் ஒட்டுமொத்த மனச்சான்றையும் உலுக்குகிறது.
அண்மையில் கேபிஏ எஞ்சினியரிங், எஸ்கே இண்டஸ்ட்ரீஸ், விவிஆர் பிளான்ட் எஞ்சினியரிங் உள்ளிட்ட நிறுவனங்களால் கைவிடப்பட்டு பல மாதங்களாகச் சம்பளமின்றித் தவித்த 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மனிதவள அமைச்சை நாடிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, பங்ளாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து குடும்பப் பொறுப்பைச் சுமந்து வரும் அந்த ஊழியர்களுக்குச் சம்பளம் மறுக்கப்பட்டது. இது வெறும் ஒப்பந்த மீறல் மட்டுமன்று. அவர்களின் குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும் பிள்ளைகளின் கல்விக் கனவையும் ஒரே நாளில் சிதைக்கும் கோரமான துரோகமாகும்.
லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டு, தங்களுக்காக உழைக்கும் ஊழியர்களை ஏமாற்றுவது அறக்கேடு. அது தொழிலையும் பாதிக்கும்.
வெளிநாட்டு ஊழியர்களை வஞ்சிப்பதைத் துளியும் பொறுத்துக்கொள்ளாத அணுகுமுறையைச் சிங்கப்பூர் சட்டம் கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினையில் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இயக்குநர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டதாகக் கூறப்பட்டாலும், சட்டத்தின் நெடுங்கைகள் அத்தகைய ஏமாற்றுக்காரர்களை உறுதியாகத் தண்டிக்கும்.
இச்சம்பவம் ஒரு முக்கியமான பாடத்தையும் உணர்த்துகிறது. சம்பளம் வழங்கப்படாத ஊழியர்கள், அதிகாரிகளிடம் முறையிடும் நிலை மாறவேண்டும்.
நிறுவனங்கள் உரிய காலத்தில் சம்பளம் வழங்குவதை முன்கூட்டியே கண்காணிக்கும் அதிநவீன தானியக்கத் தொழில்நுட்ப முறைகளை அரசு கட்டாயமாக்க வேண்டும். அதன்மூலம் சம்பளச் சிக்கல்களை முளையிலேயே கண்டறிந்து தடுத்து நிறுத்த முடியும்.
இந்த இக்கட்டான சூழலிலும் சிங்கப்பூரின் முத்தரப்புப் பாதுகாப்புக் கட்டமைப்பு செயல்பட்ட வேகமும் அரசாங்கம் காட்டிய மனிதநேயமும் நெகிழ வைக்கிறது.
மனிதவள அமைச்சும் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியும் உடனடியாகத் தலையிட்டு ஊழியர்கள் சட்டபூர்வமாக இங்குத் தங்கிப் போராட ‘சிறப்பு விசா’க்களை வழங்கியுள்ளன.
தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆறுதல் கூறி உதவி வழங்கியதுடன், அந்த ஊழியர்கள் அனைவரையும் ஒரே தங்குமிடத்திற்கு மாற்றி உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
நெருக்கடியில் தவிக்கும் அந்த ஊழியர்களுக்குக் கைகொடுக்கும் வகையில், சிங்கப்பூரின் 80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உடனடியாக முன்வந்து இவர்களுக்காக 400க்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
அடுத்த வாரமே அவர்களுக்கான புதிய பணி நியமனங்கள் தொடங்கவுள்ளன. ‘ஒருவரையும் நாங்கள் கைவிட மாட்டோம்’ என்ற திரு இங் சீ மெங்கின் நம்பிக்கை வார்த்தைகள், சிங்கப்பூர்மீது ஊழியர்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
உலக அளவில் வெளிநாட்டு ஊழியர்கள் உரிமைகளின்றித் தவிக்கும் சூழல் பல நாடுகளில் நிலவுகிறது.
ஆனால், சிங்கப்பூர் எப்போதும் தன் உழைப்பாளர்களைக் கைவிடுவதில்லை என்பதற்கு இது சான்று. முன்னெப்போதும் இல்லாத வகையில், 2025ஆம் ஆண்டில் நாட்டின் வேலையிட மரணங்களின் விகிதம் 0.96 (ஒவ்வொரு 100,000 தொழிலாளர்களுக்கும்) என்ற அளவிற்குக் குறைந்ததும் ஊழியர் பாதுகாப்பிற்கு அரசு தரும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
குறைகளைத் திருத்திக்கொண்டு, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதோடு நாட்டின் தூண்களான புலம்பெயர் ஊழியர்களின் கண்ணியத்தையும் உரிமையையும் சிங்கப்பூர் என்றும் விட்டுக்கொடுக்காது என்ற உறுதியான செய்தியை இச்சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

