தீய பழக்கம் முதலில் வழிப்போக்கனைப் போல் வரும். பிறகு விருந்தாளியாகி, முடிவில் அதுவே நம்மை ஆட்டுவிப்பதாக ஆகிவிடும்.
அவ்வகையில், சிகரெட்டைவிட தீங்கு குறைந்தது, அப்பழக்கத்தைச் சிறிது சிறிதாக விட்டொழிக்க உதவும் என்று கூறி அறிமுகப்படுத்தப்பட்ட ‘இ-வேப்பரைசர்’ என்று சொல்லக்கூடிய மின்சிகரெட், இன்று இளவயதினரையும் தொற்றிக்கொள்ளும் பேரரக்கனாக உருவெடுத்து வருகிறது.
புகைப்பழக்கம் ஒவ்வோர் ஆண்டும் பல மில்லியன் பேர் உயிரிழக்கக் காரணமாகிறது; ஏராளமானோரின் உடல்நலமும் மனநலமும் கெட ஏதுவாகிறது.
புகைப்பழக்கம் எவ்வடிவில் இருந்தாலும் அதனால் விளையும் தீமைக்குப் பஞ்சமில்லை. புகைபிடிப்பவர் மட்டுமின்றி, அருகிலிருப்போரின் உடல்நலத்திற்கும் அது கேடு விளைவிக்கிறது.
வழக்கமான சிகரெட்டில் ஏறக்குறைய 7,000 வேதிப்பொருள்கள் உள்ள நிலையில், அதனைவிடக் குறைவான வேதிபொருள்களைக் கொண்டிருப்பதால் பாதுகாப்பானது, தீங்கும் குறைவு எனக் கூறி, சிகரெட்டிற்கு மாற்று எனச் சொல்லி, மின்சிகரெட்டை விற்பது ஏமாற்றுதானே தவிர வேறில்லை.
புகைப்பொருள்களை விற்பவர்களுக்குப் பிறரது உடல்நலத்தில் என்ன அக்கறை இருந்துவிடப் போகிறது? அவர்களின் அக்கறை எல்லாம் பணமீட்டுவதில்தான் இருக்கும். அதன் பின்னணியில் வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும்.
ஒருபக்கம், செயற்கை உரமிடாத, இயற்கையாக விளைந்த உணவுப்பொருள்களை அதிக விலைகொடுத்தேனும் வாங்கி, உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது கூடி வருகிறது.
அதே நேரத்தில் இன்னொரு பக்கம், நிகழ்போக்கு (trend) எனச் சொல்லிக்கொண்டு, மின்சிகரெட்டை நாடுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சிங்கப்பூரில் மின்சிகரெட் வைத்திருப்பதோ, பயன்படுத்துவதோ, விற்பதோ குற்றம். அதுகுறித்த விழிப்புணர்வை அரசாங்கம் அதிகப்படுத்தி வந்தாலும், மின்சிகரெட் புழக்கம், விற்பனைக்காகப் பிடிபடுவோரின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு மின்சிகரெட் வைத்திருந்ததாகக் கூறி 4,916 பேர் பிடிபட்டனர்; அதற்கு அடுத்த ஆண்டில் 60% கூடி, 7,838 பேர் சிக்கினர்.
இந்நிலையில், இவ்வாண்டு முற்பாதியில் மட்டுமே கிட்டத்தட்ட 5,480 பேர் மின்சிகரெட் வைத்திருந்ததற்காக அல்லது புழங்கியதற்காகப் பிடிபட்டுள்ளனர்.
அவர்களில் ஏறத்தாழ 690 பேர் பள்ளி, உயர்கல்வி நிலைய மாணவர்கள் என்பது கவலையளிக்கும் செய்தி.
குறிப்பாக, நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக அறியப்படும் இளையர்களை, மாணவப் பருவத்திலேயே தமக்கும் பிறருக்கும் கேடுதரும் புகை, போதைப் பழக்கங்களை நாட விட்டுவிடலாகாது.
தீயவழிக்குச் செல்வதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்தே, சிறுவயதிலேயே நற்பண்புகளையும் நன்னெறிகளையும் விதைத்து, நல்லனவற்றை எடுத்துக்கூறி வளர்க்கும் வகையில், ஆத்திசூடி, உலகநீதி, கொன்றை வேந்தன் என நம் தமிழ்ச் சான்றோர் படைத்த அறநூல்கள் பல உள்ளன.
ஐம்பதைவிட ஐந்தில் வளைப்பது எளிது. அதனால், இளையர்கள், அதிலும் குறிப்பாக மாணவர்கள் புகைப்பழக்கத்திற்கு அறிமுகமாகும் வழிகளைக் கண்டறிந்து, அவர்களை அப்பழக்கத்துக்கு அண்டவிடாமல் செய்வது அவசியமாகிறது.
ஒன்றைப் பழக்கப்படுத்திக்கொள்வதிலும், தீயொழுக்கத்தை விட்டொழிப்பதிலும் தனியொருவரின் மனவுறுதியும் மனக்கட்டுப்பாடுமே பெரும்பங்காற்றுகின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அதே நேரத்தில், தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை ஒழித்து, நல்லனவற்றை நாட ஒருவர்க்கு உற்றவர்களும் மற்றவர்களும் கைகொடுக்கலாம்.
போதைப்பொருள்களுக்கு எதிரான போராட்டத்தைப்போல, நாளுக்குநாள் பேருரு எடுத்துவரும் புகைப்பழக்கத்திற்கு எதிராகவும் தனிமனிதர்களும், சமூகமும், அமைப்புகளும், அரசாங்கமும் எப்போதும் வலிமையாக, அணிதிரள வேண்டியது காலத்தின் தேவை.
சிங்கப்பூரில் 21 வயதிற்குட்பட்டவர்களுக்குப் புகையிலைப் பொருள்களை விற்பது சட்டப்படி குற்றம். இந்நிலையில், மின்சிகரெட் பயன்படுத்துவது, விற்பதற்கு எதிரான தண்டனைகளை அரசாங்கம் மேலும் கடுமையாக்க வேண்டும்.
மாணவர்களிடமும், இளையர்களிடமும், பொதுமக்களிடமும் மின்சிகரெட் புகைப்பதால் நேரும் கெடுதல்கள் குறித்து விளக்கி, அதற்கு எதிரான விழிப்புணர்வை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
நம்மை பாதிக்கும் புகை எப்பொழுதும் மனிதகுலத்திற்கும் மனிதநலத்திற்கும் பகைதான்!

