தேசிய தினம் - சிந்தனைக்கும் வருங்காலத் திட்டமிடலுக்குமான தருணம்

தேசிய தினம் - சிந்தனைக்கும் வருங்காலத் திட்டமிடலுக்குமான தருணம்

4 mins read
83845ca7-7921-4e70-845e-5000f1103bd8
-
Google News Preferred Icon

நாம் நமது நாட்டின் 61வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறோம். நமது வரலாற்றையும், பல்வேறு நெருக்கடிகளிலிருந்து மீண்டுவந்து தேசத்தைத் தொடர்ந்து கட்டியெழுப்பிய பல தருணங்களையும் மீண்டும் ஒருமுறை நினைவுகூர்கிறோம். நாம் அடைந்த சாதனைகள் அனைத்துக்கும் கவனமான சிந்தனையும் திட்டமிடலுமே முதன்மைக் காரணம்.

நமது நீர், உணவு, எண்ணெய், கனிமங்கள், வளங்கள், மனிதவளம் ஆகிய தேவைகள் பிற நாடுகளையே சார்ந்திருக்கின்றன. உண்மையைக் கூர்ந்து கவனித்தால், உலகெங்கிலும் ஏற்படும் வறட்சியோ வெள்ளப்பெருக்கோ நமது அன்றாடத் தேவைக்கான பொருள்களைப் பாதிக்கும், தொழிற்துறையின் வளர்ச்சியை முடக்கும்.

பிரதமர் லாரன்ஸ் வோங் நாட்டு மக்களுக்கு ஆற்றிய தேசியத் தின உரையைச் சிந்தித்துப் பார்ப்போம். நமது முதல் 50 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், நாம் இப்போது இயங்கிவரும் உலகம் முற்றிலும் மாறுபட்டது என்பதை அது விளக்குகிறது.

துடிப்புடன் இருந்த உலகப் பொருளியல், நம் நாடு முன்னேற உதவியது. நம்மை எதிர்கொண்ட சோதனைகளைத் தாண்டிச் செயல்பட்டோம். ஆனால் இப்போது நிலைமை அதுவன்று. அனைத்துப் பொருளியல் கொள்கைகளும் இப்போது கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

பருவகால மாற்றங்களால் பருவநிலையில் பெரும் மாற்றத்தைக் காணமுடிகிறது. வெள்ளப்பெருக்கு, சூறாவளி, கடுமையான வெப்பம் அல்லது கனமழை ஆகிய இயற்கைச் சீற்றங்கள் உணவு விநியோகத்தையும் அனைத்துலக வர்த்தகத்தையும் பாதித்துள்ளன. இதனுடன் போர் மற்றும் மோதல்களையும் சேர்க்கும்போது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சோதனைக்கு உள்ளாகின்றன. அவரவர் நலனை அவரவரே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. நாம் முன்னேற்றத்திற்கு மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். பல நாடுகளுடன் நட்பு பாராட்டி, பழைய பங்காளி நாடுகளுடனான பிணைப்பை வலுப்படுத்துகிறோம்.

சிங்கப்பூரின் தொடக்கக்கால வளர்ச்சியைக் கண்டு வியந்த உலகம், நமது தேசத்தை ‘ஆசியாவின் நான்கு புலிகளில்’ (Four Asian Tigers) ஒன்று என வர்ணித்தது. ஹாங்காங், கொரியா, தைவான் ஆகியவற்றுடன் சிங்கப்பூரும் ஆசியாவின் எதிர்காலத்திற்கான முன்மாதிரியாகப் போற்றப்பட்டது.

தொழில்நுட்ப மேம்பாட்டைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் பெரும்பாலும் ஜப்பான், ஜெர்மனி, போன்ற நாடுகளுடன் ஒப்பிடப்பட்டது. பின்னர், கல்விச் சாதனையிலும் புத்தாக்கத்திலும் நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற ஸ்கேண்டினேவிய நாடுகளை நோக்கிச் செல்வதாகக் குறிப்பிடப்பட்டோம்.

மேற்கூறிய அனைத்து நாடுகளுடனும் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் ஒருவகையில் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. குறிப்பிட்ட இந்த நாடுகள் அனைத்தும் இனம், சமயம், மொழி ரீதியாக ஒரே மாதிரியான (homogeneous) மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. இந்த ஒருமுகப் பண்பாடு, அந்நாடுகளில் அறநெறிகள், கொள்கைகள் மக்கள் நடந்து கொள்ளும் முறைகள் யாவை என்பதை மக்களுக்கு எடுத்துரைத்துச் செயலாக்கப்படுத்துவது எளிதாக இருந்திருக்கலாம். சிங்கப்பூரோ அனைத்து அம்சங்களிலும் பன்முகத்தன்மை (heterogeneous) கொண்டது. இதனால், சிங்கப்பூர் எதிர்நோக்கிய, தொடர்ந்து எதிர்நோக்கும் மாபெரும் சவாலை நாம் குறைவாக மதிப்பிடக்கூடாது. இந்த இன, சமய, மொழி, பண்பாட்டுப் பன்முகத்தன்மை சமுதாயத்தில் பிளவுக்கும் மோதலுக்கும் எப்போதுமே ஒரு களமாக இருக்கும். ஆயினும், சிங்கப்பூர் மக்களை ஒரு பொதுவான இலக்கை நோக்கி ஒன்றிணைத்து, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் அதே வேளையில் வளர்ச்சியை முடுக்கிவிடுவது உண்மையில் ஒரு கடினமான பணியாகும். அரசாங்கம் முதல் அடித்தள அமைப்புகள் வரை அனைவரின் முயற்சிகளோடும் நாம் அதைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

பல ஆயிரம் ஆண்டுகளாகவே ஒரு வர்த்தக நாடாக, மறு ஏற்றுமதி செய்வதற்கான துறைமுகமாக நாம் தொடர்ந்து பார்க்கப்படுவோம். அனைத்துலகக் கப்பல் மேலும் விமானப் போக்குவரத்தின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. புதிய தொழில் துறைகளில் நாம் முன் நிற்க வேண்டியுள்ளது.

நமது அமைதி, பாதுகாப்பு, பொருளியல் வெற்றிகள் கடினமாக ஈட்டப்பட்டவை. வெளிநாட்டு மிரட்டல்களையும், இணைய ஊடுருவல்களையும் தடுத்து சிங்கப்பூர் வளர வேண்டும். இறக்குமதி பொருள்களின் விலை உயர்வால் பாதிக்கப்படாமல் மக்களைக் காக்க நமது நிதிக் கொள்கைகள் தொடர்ந்து சீரமைக்கப்படுகின்றன. நம் நாடு ஆண்டுதோறும் 19 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும், $200 பில்லியன் வெளிநாட்டு நேரடி முதலீட்டையும் ஈர்க்கிறது. $800 பில்லியனுக்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) பதிவு செய்கிறோம். இருப்பினும், நாம் ஒரு நிலையற்ற உலக ஒழுங்கில் வாழ்கிறோம் என்பதால் தொடர் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை.

சிங்கப்பூர் மக்களாகிய நாம், எதிர்காலத்தில் ஒரு வெற்றிகரமான தேசத்தை நோக்கி முன்னேறுவதில் நமது பங்கைப் பற்றித் துல்லியமாகப் புரிந்துகொள்ள வேண்டும். பிரதமரின் வார்த்தைகளில், ‘நாம் இனம், மொழி, மதம் பாராது, சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் ஒருமித்த உறுதிப்பாட்டைக் கொண்டிருப்போம். அதன்மூலம், ஒரு தேசமாக உருமாறுவோம்’. மேலும் அவர், ‘வலிமையான சிங்கப்பூரை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வது நமது பொறுப்பாகும்’ என்றும் வலியுறுத்தினார். இந்தத் தொலைநோக்குப் பார்வையோடு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவோம்.

குறிப்புச் சொற்கள்