தமிழ் முரசின்கீழ் இயங்கும் ஆங்கில ஊடகமான தப்லா! வார இதழ் அண்மையில் புதுப்பொலிவு கண்டு, அதிகாரபூர்வமாக அதன் இணையத்தளத்தை வெளியிட்டது. இது, தமிழர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்கும் நற்செய்தி.
பல ஆண்டுகளாக தப்லா! தமிழரல்லாத சிங்கப்பூர் இந்தியர்களுக்கும் இந்தியாவிலிருந்து வந்தோருக்குமான ஊடகம் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த மனப்பான்மை வரும் காலத்தில் மாறவேண்டும். நாம் அதை மாற்றியமைக்கவும் வேண்டும்.
சிங்கப்பூரில் வாழும் அனைத்து இந்தியர்களையும் மையமாகக் கொண்டு செய்திகளை வெளியிடுவதே தப்லா!வின் முதன்மையான குறிக்கோள். இந்தியர்கள் மட்டுமல்லாது, சிங்கப்பூரில் வாழும் பல இன மக்களுக்கும் இந்தியச் சமூகம் சார்ந்த நடப்புகளைத் தெரிவிக்கும் ஓர் ஊடகமாகத் தப்லா! திகழும்.
அத்துடன், வரும் காலத்தில் உள்ளூர் இந்தியச் சமூகத்திலும் உலகளாவிய புலம்பெயர் சமூகங்களிலும் உள்ள சமூகத் தலைவர்கள், தொழில்முனைவர்கள், ஆதரவாளர்கள், பங்குதாரர்களை ஒன்றிணைத்து, அவர்களுடன் தொடர்புகொள்ளவும் தப்லா! முனையும்.
அத்திசையை நோக்கிய முதல் முயற்சிகளில் ஒன்றுதான் நவம்பர் 19ஆம் தேதியன்று எஸ்பிஎச் மீடியாவின் புதிய கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வு. தப்லா!வை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் ஏறத்தாழ 80 சமூகத் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் முன்னிலையில் அந்நிகழ்வு நடந்தேறியது.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாசுடன் தப்லா! ஆசிரியர் எஸ்.வெங்கடேஷ்வரன் நெறியாளராக வழிநடத்திய கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தியச் சமூகத்திற்குள்ளான ஒருங்கிணைப்பு, பிற இன சமூகங்களுடன் இந்தியர்களின் ஒருங்கிணைப்பு, இந்தியத் தொழில்நிறுவனங்களுக்கான மனிதவளத் தேவைகள், இந்தியக் கலைகள், செயற்கை நுண்ணறிவால் வேலைகளில் ஏற்படக்கூடிய தாக்கம், தாய்மொழிகள், சிங்கப்பூரின் கல்வி அமைப்பின் கட்டமைப்பு போன்ற தலைப்புகளில் பல கடினமான கேள்விகள் திரு தினேஷிடம் முன்வைக்கப்பட்டன.
அரசியலுக்குப் புதியவர் என்றபோதும் அவர் பதிலளித்த விதத்தில் அது தெரியவில்லை. பல்லாண்டு அனுபவம் பெற்றவர்போல் விவேகத்துடனும் நிதானத்துடனும் அவர் பதிலளித்தது வியப்பில் ஆழ்த்தியது.
தொடர்புடைய செய்திகள்
பிளவுகளைக் கடந்து இந்தியச் சமூகம் ஒருங்கிணைய வேண்டும் என்றும் சமூகத்தில் பிளவுகள் இருப்பின் அவை சிங்கப்பூருக்கும் இந்தியர்களுக்கும் நன்மையளிக்காது என்றும் கடந்த மே மாதம் நடந்த பொதுத் தேர்தலின்போது தமிழ் முரசுக்கு அளித்த நேர்காணலில் திரு தினேஷ் குறிப்பிட்டிருந்தார்.
அன்று அவர் சொன்ன அக்கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும். அதற்கிணங்க, இந்தியச் சமூகம் மேலும் ஒருங்கிணந்து வலுவடைய வழிவகுக்கும் முக்கியக் கருவியாகவும் தளமாகவும் தப்லா! திகழும்.
நல்ல செய்திகளை வெளியிடுவதன்மூலம் மட்டுமே தப்லா!வை அடுத்த நிலைக்குக் கொண்டுசென்றுவிட முடியாது. மேலும் பல மின்னிலக்க, நேரடித் தளங்களில் தப்லா!வை இடம்பெறச் செய்வது, முறையான சந்தைப்படுத்தல், சமூக பங்களிப்புகளுக்கான வழிகளை ஏற்படுத்திக்கொடுப்பது போன்ற பல ஆக்கபூர்வ முயற்சிகளும் கைகூட வேண்டியது அவசியம்.
இப்போது தப்லா! இதழிடமிருந்து சமூகத்தின் எதிர்பார்ப்புகள் அதிகம். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற சமூகமும் அந்த ஊடகத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.
சிங்கப்பூர்த் தமிழ், இந்தியச் சமூகத்தின் கதைகளை உலகிற்கு உரக்கச் சொல்லும் தளமாக தப்லா! விளங்க தொடர்ந்து பாடுபடுவோம் என உறுதியளிக்கிறோம்.

