தாதியரின் அயராத உழைப்பை அங்கீகரிக்கவும் பங்களிப்புகளை ஏற்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி சிங்கப்பூரில் தாதிமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தாயுள்ளத்தோடும் அர்ப்பணிப்புடனும் தாதியர் உளப்பூர்வமாக ஆற்றும் பங்கு அளப்பரியது. அண்மையில் கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் தாதியர்களின் உன்னத சேவையைக் கண்கூடாகக் கண்டோம்.
மூப்படைந்து வரும் சமூகமாக இருப்பதாலும் தொற்றுநோய்கள் உருவெடுத்துவரும் காலகட்டத்திலும் தாதியர்களின் சேவை முன்னெப்போதையும்விட இக்காலத்தில் மிகவும் இன்றியமையாததாகி உள்ளது.
ஆண்டுக்காண்டு அதிக எண்ணிக்கையில் தாதியர் சிங்கப்பூருக்குத் தேவைப்படுவர்.
தாதிமைப் பணி பல வழிகளிலும் சவால்மிகுந்தது. 24 மணி நேரமும் அட்டவணைப்படியான வேலை என்பதுடன் எச்சூழலிலும் பொறுமையோடும் அன்போடும் ஆற்ற வேண்டிய பணி. சொந்தப் பிரச்சினைகள், மன உளைச்சல்கள், சிக்கல்கள் எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு, அடுத்தவரின் தேவைகளைக் கவனிக்கக் கோரும் அர்ப்பணிப்புமிக்க வேலை.
இத்தகைய பணியை மனமுவந்து செய்பவர்கள் சிலர் மட்டுமே எனும் நிலையில், சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்களுக்கான அனைத்துலகப் போட்டித்தன்மையும் உள்ளது.
சுகாதார அமைச்சுத் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் மொத்தம் 43,772 தாதியர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தனர். 2023ஆம் ஆண்டு மேலும் குறைந்தது 4,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கூடி வரும் தேவையை ஈடுகட்ட வெளிநாட்டுத் திறனாளர்களையும் இத்துறை சார்ந்துள்ளது. பிலிப்பீன்ஸ், மலேசியா, மியன்மார், இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து தாதியர் இன்று சிங்கப்பூர் மருத்துவமனைகளில், மருந்தகங்களில், தாதிமை இல்லங்களில், இதர சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றுகின்றனர்.
இத்துறையில் சிங்கப்பூரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது சமூக நலனுக்குப் பலம் தரும்.
ஆங்கிலத்தை முதல்மொழியாகக் கற்ற தலைமுறையினர் வெளிநாட்டுத் தாதியருடன் ஆங்கிலத்தில் எளிதாக உரையாடலாம். ஆனால், ஆங்கிலம் தெரியாத முதியவர்கள் சில நேரங்களில் மொழிப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
சிங்கப்பூரின் தாதியர் தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அத்துறை சிறந்ததொரு ஈர்ப்புமிக்க துறையாக இருப்பதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அதேநேரத்தில், சிங்கப்பூரர்கள் முன்வந்து தாதிமைத் தொழிலில் ஈடுபட வேண்டும்
இத்துறையில் முன்னேறுவதற்குத் தற்போது வழிகளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முனைவர் பட்டம் வரையில் படிப்பதற்கான வசதியும் ஆதரவும் உள்ளன.
பல்வேறு விருதுகள், ஆதரவுத் திட்டங்கள், கல்வி உபகாரச் சம்பளம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. சுகாதார அமைச்சுடன் சேர்ந்து, ஒவ்வொரு குழுமமும் மருத்துவமனையும் தனித்தனியே அங்கீகாரங்களையும் பல்வேறு வழிகளில் ஆதரவையும் தாதியருக்கு வழங்குகின்றன. இதில் தலையாயது சிங்கப்பூர் அதிபர் ஆண்டுதோறும் வழங்கும் தாதிமை விருது. 2000ஆவது ஆண்டு அன்றைய அதிபர் எஸ்.ஆர். நாதன் தொடங்கிய தாதியருக்கான அதிபர் விருதை இதுவரையில் 98 பேர் பெற்றுள்ளனர்.
தாதிமைத் தொழில் விருப்பப் பணிகளில் ஒன்றாக இருப்பதற்கு அரசாங்கத்துடன் சமூகமும் கைகோத்துச் செயல்பட வேண்டும்.
நோயாளிகளைப் பராமரிப்பதுடன் நோயாளிகளின் குடும்பத்தாருக்கும் ஆதரவாக விளங்கிவரும் தாதியர், பதவி, விருதுகள், அங்கீகாரம் எல்லாவற்றையும் தாண்டி முக்கியமாக எதிர்பார்ப்பது, நோயாளிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரது ஆதரவைத்தான்.
செயல்களாலும் புன்னகையாலும் ஆதரவான வார்த்தைகளாலும் நோய் தீர்க்க உதவும் தாதியரின் மன உளைச்சலையும் வேலைச் சிரமங்களையும் மக்களின் அன்பான வார்த்தைகள் ஒரு நொடியில் போக்கிவிடும்.
அர்ப்பணிப்போடு பணியாற்றும் தாதியரிடம் அன்போடும் பரிவோடும் நடந்துகொள்வதே சமூகம் அவர்களது சேவைக்கு ஆற்றும் கைம்மாறு. தாதியரின் தேவை உணர்ந்து, அவர்களுடைய பணியின் சிரமங்களைப் புரிந்து அவர்களைப் போற்றுவோம், கொண்டாடுவோம்!

