தொண்ணூறு ஆண்டு முரசு இன்னும் முழங்கிக்கொண்டிருக்கிறது. முதல் தொடங்கியவரோ, பின் வந்தவர்களோ நினைத்திருக்க மாட்டார்கள், முரசு தொண்ணூறைத் தொடுமென்று. உலகப்போர், அரசியல் மாற்றங்கள், இணைய வளர்ச்சி, சரிந்துவரும் மொழிப் புழக்கம், செயற்கை நுண்ணறிவு எனத் தன்னை நோக்கி வந்ததையெல்லாம் தன்னுள்ளே வாங்கிக்கொண்டு, தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது தமிழ் முரசு.
சுதேசமித்திரன் தொடங்கி தமிழ்ப் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது. இங்குக் குடியேறிய தமிழர்களுக்கும் பத்திரிகை ஒரு முக்கிய தொடர்புச் சாதனமாக விளங்கியது. தாய் நாட்டை நம்மோடு இணைக்கும் பாலம், உள் நாட்டின் போக்கைக் கணித்துச் சொல்லும் வழிகாட்டி. மொழியின் அரவணைப்பில் இதம் தேடிய சிங்கப்பூர் தமிழர்கள் தமிழ் முரசை பேணி வளர்த்தார்கள்.
தமிழவேள் கோ. சாரங்கபாணியின் நோக்கங்கள் ஒரு காலகட்டத்தில் மாறத்தொடங்கின. தமிழகத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கும் இங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றியமைப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டென்பதை உணர்ந்து, சிங்கப்பூரின்மேல் நம்பிக்கை வையுங்கள் எனும் கருத்தைப் பரப்பத் தொடங்கினார்.
இம்முயற்சியில் அவர் வெற்றிபெற எடுத்துக்கொண்ட பல முயற்சிகளில் தமிழ் முரசும் ஒன்று. வாழ்க்கைச் சூழல் அனைவருக்கும் சரிவர அமைந்திருந்தால், திரவியம் தேடி வந்த தமிழர்கள் திரும்பத் தமிழகத்திற்குச் செல்லமாட்டார்கள் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.
தமிழ் முரசு சிங்கப்பூர் தமிழர்களின் குரலாய் மாறியது. தமிழர்களை ஈர்க்கும் நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள், தனிமனித வெற்றி தோல்விகள், இந்திய, உலகச் செய்திகள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எனப் பலவற்றை உள்ளடக்கியதில் முழுமை பெற்றது. சமூகக் குரலாக ஒலிக்கத் தொடங்கியது.
தமிழ் குடும்பங்களின் எண்ணிக்கை கூடியது. நாம் சிங்கப்பூரர்கள் ஆனோம். தமிழ்ப் பள்ளிகள் பிறந்தன. தமிழ்மொழிக்கு அதிகாரத்துவ மொழித் தகுதி கொடுக்கப்பட்டது. அதன்வழி, பள்ளிகளில் இரண்டாம் மொழிக் கொள்கையினால் அனைத்துத் தமிழ் மாணவர்களும் தமிழ் கற்றனர். அவர்களின் படைப்புகளுக்குத் தளமாய் தமிழ் முரசு திகழ்ந்து.
இணையம், கைப்பேசித் தொழில்நுட்பங்கள், சமூக வலைத்தளங்கள் மக்கள் தகவல்களை அறிந்துகொள்ளும் முறைகளை மாற்றியமைத்தன. தமிழ் முரசு இதனைக்கண்டு தளர்ந்துவிடவில்லை. உலகளாவிய அளவில் பலரும் முயற்சி செய்துகொண்டிருக்கும் சமயம், கணினிவழி முழுமையாக வடிவமைத்த தமிழ் பத்திரிகையை வெளிக்கொணர்ந்தது.
இணையத்தளங்கள் அப்படியே நின்றுவிடவில்லை. சமூக வலைத்தளங்களின்வழி, மக்களின் விருப்பு வெறுப்புகளுக்குத் தகுந்தாற்போல் தகவல்கள் அளிப்பதும், அவரவர் தன்னிச்சையாகவே தம் படைப்புகளை உலகிற்குப் பகிரும் வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தன. கட்டுப்பாடுகளின்றி உண்மையும் கற்பனையும் கலந்த ஓர் உலகில் நாம் அடியெடுத்து வைத்திருக்கிறோம். அனைவரும் நம்பக்கூடிய ஊடகமாக நிற்பதில் தமிழ் முரசு பெருமைப்படுகிறது. இதற்கு எஸ்பிஎச் குழுமத்தில் முழுமையாய் சேர்ந்ததும் ஒரு காரணம் எனலாம். அரசாங்கத்தின் ஆதரவும் சேர்ந்திருக்கும் இத்தருவாயில் விளையும் வாய்ப்புகளைச் சமூகமாக நாம் பிடித்துக்கொண்டு மேலுயர வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
இளைய தலைமுறையினர் ஊடகங்களை அணுகும் முறை வேறுபட்டிருக்கலாம். அவர்களின் சுவைக்கேற்ப, தரம் குறையாமல் தமிழையும் தகவல்களையும் தருவதே தமிழ் முரசின் அடுத்தப் பயணம். வேறு உத்தி, வேறு கோணம், அதிவேக வாழ்க்கைக்கு ஈடுகொகுத்துக் குறுகத் தறித்துக் கூறும் முறைகளை நாங்கள் கற்றுவருகிறோம்.
ஆனால், நாங்கள் மட்டும் தேர் இழுக்க முடியாது. மொழி ஒரு மனிதனின் அடையாளம். அதனைத் தொலைத்துவிட்ட தமிழர்களை உலகில் பலவிடங்களில் காண்கிறோம். அவ்வழி நம் சமுதாயமும் செல்வதைத் தடுப்பது நாம் ஒவ்வொருவரின் கடமை. உங்களைச் சுற்றியிருப்பவர்களைத் தமிழ் முரசோடு இணைக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். ஒவ்வொரு தமிழ் இல்லத்திலும் தமிழ் முரசு பத்திரிகை இருப்பின், அச்சுப் பத்திரிகை இன்னும் பல ஆண்டுகள் இருக்கும். அதற்கு முயல்வோம். அதனையும் தாண்டி, மின்னிலக்க உலகில் திறன்பேசிகளின்வழி உங்களை அடையும் தமிழ் முரசின் எண்ணிக்கையும் மேல்நோக்கி உயர வேண்டும். அதிகாரத்துவ மொழியாய் தமிழ் இருப்பதனால் மட்டுமே தமிழ் முரசு தொடர்ந்துவிடாது.
எங்கள் வாசகர்களுக்கு நன்றி. எங்களைவிட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணையுங்கள். வாசகர் அல்லாதவர்களை வரவேற்கிறோம். வியாபாரிகள் தமிழ் முரசில் விளம்பரங்களைக் கூட்டுங்கள். அனைவரும் தமிழ் முரசு குடும்பமாவோம். தமிழ் முரசோடு இணைந்திருப்போம். ஒன்றுகூடி நூற்றாண்டை நோக்கிப் பயணிப்போம்.
ஒன்றென்று கொட்டு முரசே! - அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! - இந்த நானில மாந்தருக் கெல்லாம். - பாரதியார்