புதிய எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டிய 2025ஆம் ஆண்டு

4 mins read
1f80ef96-9258-4877-a100-f9cbc1f420a2
மரினா பே வட்டாரத்தில் புத்தாண்டை வரவேற்க 2025 ஜனவரி 1ஆம் தேதி இடம்பெற்ற வாணவேடிக்கை அங்கம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காலவோட்டத்தில் சில ஆண்டுகள் அமைதியாய்த் தொடங்கி, ஆரவாரமின்றித் தொடர்ந்து, அதிகம் கவனம் ஈர்க்காமல் நிறைவுறும். சில ஆண்டுகளோ மிகவும் ஆர்ப்பாட்டமாய்த் தொடங்கி, மந்தமாய் முடியும்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை 2025ஆம் ஆண்டு, அனைவரையும் தட்டியெழுப்பி, ஆரவாரத்துடன் உசுப்பிவிட்ட ஆண்டு. தொடக்கம் மட்டுமன்றி, ஆண்டு முழுவதும் அதே நிலை தொடர்ந்தது.

ஆக, ஆண்டுநிறைவிற்கான வழக்கமான தலையங்கமன்று இது. அடுத்து என்ன செய்ய எத்தனித்துள்ளோம் எனக் கேள்வி கேட்கும் தலையங்கம்.

மனித இனத்தையே திசை திருப்பும் மாற்றங்களைக் கண்டது இவ்வாண்டு. 2026ஆம் ஆண்டு எப்படி அமையும்? மாற்றங்களை நம் முன்னேற்றங்களாகக் கொண்டுசெல்ல நாம் என்ன செய்யப் போகிறோம்?

சிங்கப்பூர் தனது 60வது சுதந்திர ஆண்டைக் கோலாகலமாகக் கொண்டாடிய ஆண்டு இவ்வாண்டு. 1965ல் மலேசியாவிலிருந்து பிரிந்து, மீள்வோமா மடிவோமா எனும் அச்சத்துக்கிடையிலும் ஒரு தன்னம்பிக்கையுடன் புதிய சிறகுகள் விரித்துப் பறந்த சிங்கப்பூர் தற்போது கண்டிருக்கும் வளர்ச்சி வியப்பிற்குரியது.

இரு தலைமுறைக்குள் பல சிகரங்களை எட்டியிருக்கும் சிங்கப்பூரின் வெற்றி தானாகக் கிடைத்துவிடவில்லை. அதற்குப்பின் பலரின் உழைப்பு அடித்தளமாய் அமைந்திருக்கிறது.

உத்திபூர்வ முடிவுகள், அனைத்து நாடுகளுடனும் தோழமை, மனிதவள மேம்பாடு, கல்வி, செயல்திறன், தொழில்நுட்பம், வர்த்தகம், உள்கட்டமைப்பு என வெற்றிக்குத் தேவையான பல காரணங்களை அடையாளங்கண்ட அரசியல் தலைமைத்துவமும் மக்களின் ஒத்துழைப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டிய அம்சங்கள்.

பல்வேறு பண்பாடுகளில் 60 ஆண்டு என்பது ஒரு பெரு வட்டம். ஒரு புதிய தொடக்கம். கடந்த காலச் சாதனைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வதோடு, எதிர்காலத்திற்கான ஒரு வலுவான திட்டத்தைத் தீட்டவேண்டுமென்பதும் அத்தியாவசியம்.

இவ்வாண்டு சிங்கப்பூரின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. தேர்தலுக்குப்பின் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது.

உலக அளவில் வர்த்தக வரி (Tariffs) தொடர்பான சவால்கள் மேலோங்கியிருந்த சூழலில், தன்னைப்பேணித்தனம் (Protectionism) தலைதூக்கி நிற்கிறது. சிங்கப்பூர் போன்ற உலகளாவிய வர்த்தகத்தை நம்பியுள்ள சிறு நாடுகள் மிகவும் திறமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட வேண்டிய நேரம். ஆசியான் போன்ற வர்த்தகக் கூட்டமைப்புகளுடன் உறவை வலுப்படுத்துவதுடன், மேலும் பல உலக நாடுகளுடன் புதிய நட்புறவுப் பாலங்களைச் சிங்கப்பூர் அமைக்கத் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டில், மேலும் பல முக்கிய அமைப்புகளும் அவற்றின் ‘மைல்கல்’ ஆண்டுநிறைவைக் கொண்டாடின. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 180ஆம் ஆண்டுநிறைவையும் தேசிய நூலக வாரியம் 30ஆம் ஆண்டு நிறைவையும் இந்திய மரபுடைமை நிலையம் 10ஆம் ஆண்டுநிறைவையும் கொண்டாடின.

தமிழ் முரசும் தனது 90வது ஆண்டைக் கொண்டாடியது. 1935ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்காகத் தொடங்கி, சமூகத்தின் குரலாகத் தொடர்ந்து செயலாற்றி வருகிறது தமிழ் முரசு. 1,000 விருந்தினர்கள் பங்கேற்ற மிகப் பெரிய நிகழ்ச்சியாய் ஆண்டுவிழா அமைந்தது. வாசகர்களுடனும் முக்கியப் பங்காளிகளுடனும் உள்ள உறவை மேலும் வலுப்படுத்தியது இவ்விழா.

தமிழ் முரசு, ‘இளைய தலைமுறை’ (Ilaya Thalaimurai) எனும் இளையர்களுக்கான தளத்தையும் அறிமுகப்படுத்தியது. தமிழ் முரசு காலத்திற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை இத்தள அறிமுகம் பறைசாற்றுகிறது. சமூக ஊடகங்களின் வழி 15 வயதிற்கும் மேற்பட்ட இளையர்களின் மனங்களை ஈர்க்கும் வழிமுறைகளை இளைய தலைமுறை செயலாக்கப்படுத்தி வருகிறது.

தமிழ் பேசும் இந்தியர்களுக்குத் தமிழ் முரசு என்றால், அதன்கீழ் இயங்கும் தப்லா! (tabla!) தமிழர் அல்லாத இந்தியர்களுக்காக இயங்கும் வாரப் பத்திரிகை. பத்திரிகையாக மட்டும் இயங்கிவந்த தப்லா, இவ்வாண்டு இணையத்தளத்துடன் சமூக ஊடகங்களையும் கொண்டு மறு பொலிவு பெற்றிருக்கிறது.

மற்றுமொரு மிக முக்கிய மைல்கல், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு (MCCY), இந்தியச் சமூக மேம்பாட்டிற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறது.

அறுபது ஆண்டுகளில் இந்தியச் சமூகம் பல்வேறு துறைகளில் உச்சங்களைத் தொட்டிருந்தாலும், தீர்க்கப்படாத சில பிரச்சினைகளும் உண்டு. போதைப்பொருள் புழக்கம், குடும்ப வன்முறை, ஒருங்கிணைப்பு இன்மை போன்றவற்றைக் களைய இக்குழு முயற்சி செய்யும்.

இக்குழு வெற்றிபெற அனைவரும் உழைப்போம். இவ்வெற்றிக்கு உறுதுணையாய் இருக்கப்போவது, நம் சமூக அமைப்புகளின் தலைமைத்துவ மாற்றம். வரும் ஆண்டில் அடுத்த தலைமுறைத் தலைவர்களைக் கண்டுணர்ந்து பொறுப்புகளை ஒப்படைப்பது உத்தமம்.

இளைய தலைவர்களால்தான் செயற்கை நுண்ணறிவிற்கும் சமூக ஊடகத்திற்கும் ஈடுகொடுத்து எதிர்காலத்திற்கு நம்மைக் கொண்டுசெல்ல முடியும்.

தற்போதைய தலைவர்கள் உதவும் தூரத்தில் இருப்பது நன்று. இப்போதும் இம்மாற்றம் மெதுவாய் நடைபெறுகிறது என்றாலும் அது விரைவாய் நிகழ வேண்டும்.

2025ஆம் ஆண்டின் கொண்டாட்டங்கள் வெறும் ஆண்டுவிழாக்களல்ல. அவை நாம் எங்கே இருக்கிறோம், எங்கே செல்ல வேண்டும் என்று சிந்திப்பதற்கான வாய்ப்புகள்.

இந்த ஆண்டின் ஆற்றலும், திட்டமிடலும் 2026ஆம் ஆண்டிலும் தொடர வேண்டும். SG60 தந்த ஊக்கத்துடன், ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணம் செய்வோம்.

அனைவருக்கும் தமிழ் முரசின் புத்தாண்டு வாழ்த்துகள்!

குறிப்புச் சொற்கள்