யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக இன்பாவின் (படத்தில் இடமிருந்து நான்காவதாக இருப்பவர்) ஐந்தாவது நூலான 'லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்' கவிதை நூல் இம்மாதம் இரண்டாம் தேதி சென்னை பெசண்ட் நகர் ஸ்பேசஸ் அரங்கில் வெளியிடப்பட்டது. தமிழ்க் கவிதை உலகில் ஆக அதிகமான எண்ணிக்கையில் கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் மனுஷ்யபுத்திரன் நூலை வெளியிட கவிஞர் பெருந்தேவி முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
கலை விமர்சகர் இந்திரன், வெய்யில், அமிர்தம் சூர்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி கவிதைகள் குறித்து உரையாற்றினர்.மனுஷ்யபுத்திரன் தனது உரை யில் பிரில் வைத்த குட்டைப் பாவாடை கவிதையை மிகவும் ரசித்ததாகக் குறிப்பிட்டதோடு ஓரிரு கவிதைகளை வாசித்தும் காட்டினார். கலை விமர்சகர், கவிஞர் இந்திரன் தனது உரையில், "சிங்கப்பூரில் எழுதப்படும் கவிதைகள் தரமான கவிதைகளாக இருக்கின்றன. அவற்றுக்கு தமிழகத்துக் கவிஞர்களின் தரச் சான்றிதழ் தேவையில்லை," என்றார்.
அமிர்தம் சூர்யா நூலை ஆய்வு செய்து கவிதைகளின் நுட்பம் குறித்தும் மொழி வளம் குறித்தும் சிறப்பானதொரு உரையை வழங்கினார்.
வெய்யில் தனது உரையில் திரு நக்கீரனின் காடோடி நாவலில் வரும் லயாங் குருவியைக் கவிதையில் கொண்டு வந்து மறு அறிமுகம் செய்திருக்கிறார் இன்பா என்று தெரிவித்தார்.
இன்பாவின் ஏற்புரையோடு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

