புதுடெல்லி: முதல்வர் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக டெல்லியில் பதற்றம் நிலவியது.
அச்சமயம் முதல்வரின் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டன. இது முதல்வரைக் கொல்வதற்கான பகிரங்கத் தாக்குதல் என ஆம் ஆத்மி கட்சித் தலைமை சாடியுள்ளது.
முதல்வரின் வீட்டுக் கதவு வரை பாஜகவினர் முன்னேறிச் சென்று தாக்குதல் நடத்தியதாக டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
"பாஜக குண்டர்களால் டெல்லி முதல்வரின் வீடு தாக்கப்பட்டுள்ளது. சமூக விரோத சக்திகளால் முதல்வர் வீட்டின் பாதுகாப்புத் தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
"காஷ்மீர் பண்டிட்கள் மறு வாழ்வுக்காக குரல் கொடுத்ததற்காக முதல்வர் வீடு தாக்கப்பட்டுள்ளது," என்று மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் உள்ள இந்துக்களை கெஜ்ரிவால் அவமானப்படுத்தியதாக பாஜக கூறியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவையில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கு மாநிலத்தில் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் கெஜ்ரிவால், காஷ்மீர் பண்டிட்கள் பெயரில் சிலர் கோடிக் கணக்கில் சம்பாதிப்பதாகச் சாடியிருந்தார்.

