புதுடெல்லி: காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியமான இணையத் தளங்கள் மீது இணைய ஊடுருவல்காரர்கள் 15 லட்சம் முறை ஊடுருவி, தாக்குதல் நடத்த முயன்றது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் ஆதரவுடன் இத்தாக்குதல் முயற்சி நடந்திருப்பதாக மகாராஷ்டிர இணையக் குற்றப்பிரிவின் புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இணைய ஊடுருவல் முயற்சிகள் பேரளவில் தடுக்கப்பட்டதாகவும் ஊடுருவல்காரர்களின் சில முயற்சிகள் மட்டுமே வெற்றி பெற்றதாகவும் தெரிகிறது.
பாகிஸ்தானில் இருந்து மட்டுமல்லாமல், பங்ளாதேஷ், இந்தோனீசியா, மொராக்கோ, மேற்கு ஆசியா நாடுகளில் இருந்தும் இந்திய இணையத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று மேற்குறிப்பிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கைக்கு, ‘ரோட் ஆஃப் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இணையவழித் தாக்குதலின்போது மும்பை விமான நிலையத்தின் கணினி அமைப்பிலிருந்து முக்கியமான தகவல்களைத் திருடிவிட்டதாக இணைய ஊடுருவல்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட தாங்களே காரணம் என்றும் கூறினார்.
ஆனால், இவையெல்லாம் வெறும் வதந்தி என புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
‘ஹேக்கர்கள்’ 150 இணையத்தளங்களில் மட்டுமே ஊடுருவ முடிந்தது. அவற்றில் ஒரு நகராட்சி இணையத்தளமும் ஒரு தாதியர் பயிற்சிக் கல்லூரியின் இணையத்தளமும் அடங்கும். மற்றபடி அவர்களுக்குத் தோல்வி மட்டுமே மிஞ்சியது எனப் புலனாய்வு அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.