கோல்கத்தா: கனமழை காரணமாக, மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்களில் மாண்டோரின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உயிரிழப்புகளுக்கு மேற்கு வங்க அரசும் கோல்கத்தா மின் விநியோக கழகமும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி உள்ளன.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் திடீர் மேக வெடிப்பு காரணமாக, விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இதில், கோல்கத்தா, ஹவுரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.
சில இடங்களில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியதால் பேருந்து, ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
இதனிடையே, கோல்கத்தா, ஹவுரா உள்ளிட்ட பகுதிகளில், மழையால் 11 பேர் மாண்டுவிட்டனர். இவர்களில் 10 பேர் மழைநீரில் மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கோல்கத்தா மின் விநியோக கழகத்தின் அலட்சியப் போக்குதான் பத்து பேர் உயிரிழக்கக் காரணம் எனக் குற்றஞ்சாட்டியதுடன், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அந்நிறுவனம்தான் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால், முதல்வரின் குற்றச்சாட்டை அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அவிஜித் கோஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தங்கள் நிறுவனம் மேற்கொண்ட விரிவான ஆய்வின்போது பல சம்பவங்களில் தவறாக மேற்கொள்ளப்பட்ட மின்கம்பி சார்ந்த ‘ஒயரிங்’ பணி சரியாக இல்லை என்றும் அதனால்தான் சிலர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கோல்கத்தா மின் விநியோக கழகம், பிரபல தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்காவின் தொழிற் குழுமத்தை சேர்ந்தது. ‘லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்’ ஐபிஎல் கிரிக்கெட் அணியும் இந்தக் குழுமத்துக்குச் சொந்தமானதுதான்.