தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் பாதுகாப்பு பத்து செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிப்பு

2 mins read
8185a035-0b96-4d3e-9b22-32a00b9ac0bf
இஸ்ரோ தலைவர் நாராயணன். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு 10 செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் கடந்த 7ஆம் தேதி ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.

அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

இந்த நிலையில், இந்தியாவின் பாதுகாப்பை, பத்து செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கிறோம் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.

மணிப்பூரின் இம்பாலில் நடைபெற்ற மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசியபோது இந்த விவரங்களை அவர் வெளியிட்டார்.

“இந்தியா ஒரு “துடிப்பான விண்வெளி சக்தியாக” மாறி வருகிறது. 2040ஆம் ஆண்டுக்குள் முதல் விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்கும். 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்கள் இந்தியாவிலிருந்து ஏவப்பட்டு சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டுள்ளன.

“இந்தியாவின் பாதுகாப்பை, 10 செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். இந்தியாவின் 7,000 கிலோ மீட்டர் நீள கடற்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் வடபகுதியை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது. டிரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் வசதியில்லாமல் இவற்றை சாத்தியப்படுத்த முடியாது.

“ஜி20 நாடுகளுக்காக காலநிலை, காற்று மாசுபாட்டை ஆய்வு செய்வதற்கும் வானிலையை கண்காணிப்பதற்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒரு செயற்கைக்கோளை உருவாக்கி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு நாடு அடைந்துள்ள முன்னேற்றம் அற்புதமானது, சிறப்பானது,” என்று நாராயணன் குறிப்பிட்டார்.

தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. நான்கு நாள்கள் நடந்தத் தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் இயல்புநிலை திரும்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்