புதுடெல்லி: இந்தியாவில் கிட்டத்தட்ட 100,000 பள்ளிகளில் மின்சார வசதியும், மாணவிகளுக்கான தனிக் கழிப்பறைகளும் இல்லை என்று நிதி ஆயோக்கின் (NITI Aayog - National Institution for Transforming India) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள, அரசாங்கத்தின் முதன்மையான கொள்கை ஆய்வுக் குழுவான நிதி ஆயோக், ‘நாட்டின் பள்ளிக் கல்வி முறை’ என்ற ஆய்வறிக்கையை வியாழக்கிழமை (மே 7) வெளியிட்டுள்ளது.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கை, கற்றல் குறியீடுகள் தொடர்பான தேசிய, மாநில அளவிலான தரவுகள் அந்த அறிக்கை வெளியிட்டது.
இந்தியாவிலுள்ள 98,592 பள்ளிகளில் மாணவிகளுக்குத் தனிக் கழிப்பறைகள் பயன்படுத்தும் நிலையில் இல்லை என்றும், 61,540 பள்ளிகளில் பயன்படுத்தக்கூடிய நிலையில் எந்தக் கழிப்பறையும் இல்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிகளுக்கான மின்சார வசதி 55 விழுக்காட்டிலிருந்து 91.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆனால், 119,000 பள்ளிகளில் மின்சார வசதி பயன்படுத்தும் நிலையில் இல்லை என்று அறிக்கை சுட்டியது.
ஏறக்குறைய 14,505 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை, 59,829 பள்ளிகளில் கை கழுவும் வசதி இல்லை. 51.7 விழுக்காடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன.
பீகாரில் அதிகபட்சமாக 200,000 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள 7,993 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர்கூட பயிலவில்லை.
இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 விழுக்காட்டை மட்டுமே கல்விக்காகச் செலவிடுகிறது என்பதையும் அறிக்கை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் 5.9 விழுக்காடும் ஜெர்மனி, பிரான்ஸ் 5.4 விழுக்காடும் கல்விக்குச் செலவிடுகின்றன.

