புதுடெல்லி: வரும் 2026ஆம் ஆண்டு முதல் 10ஆம் நிலை மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டில் இருமுறை சிபிஎஸ்இ (CBSE) தேர்வுகளை எழுதலாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
எனினும், அவர்கள் பிப்ரவரி மாதம் நடக்கும் முதற்கட்ட சிபிஎஸ்இ தேர்வை எழுதுவது கட்டாயமாகும் என்றும் அதிகாரிகள் புதன்கிழமை (ஜூன் 25) குறிப்பிட்டனர்.
இரண்டாம் கட்ட சிபிஎஸ்இ தேர்வு மே மாதம் நடக்கும். தேர்வில் கூடுதல் தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்கள் இரண்டாம் கட்டத்தில் தேர்வு எழுதலாம். இரண்டாம் கட்டம் கட்டாயமல்ல.
சிபிஎஸ்இ தேர்வுகளை 10ஆம் நிலை மாணவர்களுக்கு இருமுறை நடத்துவதற்கான நடைமுறைகளுக்கு இந்தியாவின் உயர்நிலைக் கல்வி மத்திய நிர்வாகக் குழு (சிபிஎஸ்இ) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் புதிய தேசியக் கல்விக் கொள்கையில் இந்நடவடிக்கையை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
சிபிஎஸ்இ தேர்வு நிர்வாக அதிகாரியான சன்யம் பரத்வாஜ், “முதல் கட்டம் பிப்ரவரி மாதத்திலும் இரண்டாம் கட்டம் மே மாதத்திலும் நடைபெறும். இரு கட்டங்களுக்கான தேர்வு முடிவுகளும் ஏப்ரல், ஜூன் மாதங்களில் அறிவிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
“(இந்த ஏற்பாட்டின் மூலம்) அறிவியல், கணிதம், சமூக அறிவியல், மொழிப் பாடங்கள் ஆகியவற்றில் ஏதேனும் மூன்று பாடங்களுக்கான தேர்வில் கூடுதல் தேர்ச்சி பெறும் முயற்சியில் ஈடுபடலாம்,” என்றும் அவர் விளக்கினார்.
குளிர்காலத்தைக் கருத்தில்கொண்டு கல்விக் காலம் மாற்றியமைக்கப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 10ஆம் நிலை மாணவர்கள் இரண்டு கட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சிபிஎஸ்இ தேர்வு எழுதலாம் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மாற்றங்களுக்கான பரிந்துரைகளை சிபிஎஸ்இ கடந்த பிப்ரவரி மாதம் முதலில் அறிவித்தது. சம்பந்தப்பட்ட தரப்புகளின் கருத்துகளைச் சேகரிக்க அவை பொதுப்படையாக வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ தேர்வுகளின் அச்சுறுத்தும் தன்மையை அகற்றும் நோக்கில் புதிய தேசியக் கல்விக் கொள்கையில் இந்த மாற்றம் பரிந்துரைக்கப்பட்டது.