இந்தியா: பட்டாசு ஆலை விபத்தில் 11 பேர் பலி; 60 பேர் காயம்

1 mins read
b493601c-ff92-481f-a38a-678aa6513efe
அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்ந்ததால் அடுத்துள்ள மாவட்டம் வரையிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 3

போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்; கிட்டத்தட்ட 60 பேர் காயமுற்றனர்.

ஹர்தா மாவட்டம், பைரகர் எனும் சிற்றூரில் அமைந்துள்ள அந்த ஆலையில் தீப்பிடித்ததால் அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் அதனால் ஏற்பட்ட அதிர்வுகள் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு உணரப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

“வெடிப்பை அடுத்து ஆலைக்குள் இருந்தவர்கள் முண்டியடித்து வெளியேற முயன்றனர். அதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி பலர் இறந்துவிட்டனர்,” என்று அப்துல் ரயீஸ் கான் என்ற காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

விபத்து குறித்து மாநில முதல்வர் மோகன் யாதவ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அமைச்சர் ரன்வேந்திர பிரதாப் சிங்கும் காவல்துறையினர் 400 பேரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ‘எக்ஸ்’ ஊடகம் வழியாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாண்டவர்களின் குடும்பங்களுக்குத் தலா 400,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தீக்காயம் அடைந்தோருக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தயார்நிலையில் இருக்கும்படி போபால், இந்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

தகவலறிந்து விரைந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் உதவி கோரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரிஷி கார்க் தெரிவித்தார்.

விபத்து நிகழ்ந்தபோது ஆலையில் ஏறக்குறைய 150 பேர் இருந்ததாக, அங்கிருந்து தப்பிய ஊழியர் ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்