மேலும் 36 பேரையும் அழைத்து வர ஏற்பாடு; மூன்று மாதங்கள் ஊதியமின்றி வேலை வாங்கப்பட்டவர்களை அரசாங்கம் மீட்டது

ஆப்பிரிக்காவில் சிக்கித்தவித்த 11 இந்திய ஊழியர்கள் நாடு திரும்பினர்

2 mins read
b8fcc840-ad00-49b5-aba3-4991a045fd07
சமூக ஊடகங்களில் தங்கள் துன்பத்தை வெளியிட்டு, வீடு திரும்ப ஜார்க்கண்ட் அரசாங்கத்தின் உதவியை நாடி, கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்குப் பிறகு அவர்களில் சிலர் நாடு திரும்பியுள்ளனர்.  - படம்: இந்திய ஊடகம்

ராஞ்சி: கேமரூன் நாட்டில் சிக்கித் தவித்த 47 இந்திய ஊழியர்களில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் தங்கள் துன்பத்தை வெளியிட்டு, வீடு திரும்ப ஜார்க்கண்ட் அரசாங்கத்தின் உதவியை நாடி, கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்திய ஊழியர்களில் சிலர் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்களை பணியமர்த்திய நிறுவனம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மீட்புப் பணியில் செயல்பட்ட மாநில புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரிகள், மீதமுள்ள 36 பேரும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

“கடந்த சில மாதங்கள் நரகமாக இருந்தது. ஆனால் வீடு திரும்பியதில் நாங்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறோம்,” என்று நாடு திரும்பியவர்களில் ஒருவரான ஹசாரிபாக்கில் உள்ள பிஷ்னுகர் தொகுதியில் வசிக்கும் ஜெய் நாராயண் குமார் மஹ்தோ கூறினார்.

முன்னதாக மாநில புலம்பெயர்வோர் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்பு கொண்ட பொழுது அவர்கள் கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் இன்றி வேலை செய்ய வற்புறுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 47 பேரும் மும்பையை சேர்ந்த நிறுவனத்தின் மூலம் மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள கேமரூனுக்கு வேலைக்கு அனுப்பப்பட்டனர்.

அந்த நிறுவனம், தர்கர்களின் மீது டிசம்பர் மாதத் துவக்கத்தில் ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உத்தரவின்படி அவர்களை அழைத்து வரும் பணி தொடங்கியது.

அழைத்து வரப்பட்டவர்கள் பத்திரமாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாக ஜார்க்கண்ட் முதல்வரின் செயலாளர் கூறினார்.

ஏனைய 36 பேரையும் இந்தியா அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்