லக்னோ: வீடு கட்டுவதற்கு அரசாங்கம் வழங்கிய மானியத்தொகை கிடைத்ததும் பெண்கள் பலர் தங்கள் கணவர்களை விட்டுவிட்டு, காதலர்களுடன் ஓடிப்போன சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்கள் சொந்தமாக வீடு கட்டிக் குடியேற உதவும் நோக்கில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் (பிஎம்ஏஒய்) மானியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அத்திட்டத்தின்கீழ் முதல் தவணையாக ரூ.40,000 கிடைத்ததும், மகராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பெண்கள், தங்கள் கணவர்களைக் கைகழுவிவிட்டு, காதலர்களுடன் ஓடிப்போனதாகச் சொல்லப்படுகிறது.
அப்பெண்களின் கணவர்கள் காவல்துறையில் புகாரளித்த பிறகு இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அண்மையில், மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் ‘பிஎம்ஏஒய்’ திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 2,350 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டதாக ‘நியூஸ்18’ செய்தி வெளியிட்டுள்ளது.
பணம் கைக்கு வந்ததும் பெண்கள் பலர் ஓடிப்போனதை அடுத்து, இரண்டாம் தவணை உதவித்தொகை வழங்குவதை நிறுத்திவைக்க அதிகாரிகள் முடிவுசெய்துள்ளதாக சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2023ஆம் ஆண்டிலும், இதேபோல் நான்கு பெண்கள் பணம் கைக்கு வந்ததும் தங்கள் காதலர்களுடன் ஓடிப்போனது குறிப்பிடத்தக்கது.
பணம் வழங்கப்பட்டும் வீடு கட்டும் பணிகள் தொடங்கப்படாததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பின்னரே, அப்பெண்கள் ஓடிப்போன விஷயம் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, ஓடிப்போன பெண்களின் கணவர்களுக்கு மாவட்ட நகர மேம்பாட்டு முகவை எச்சரிக்கை விடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
‘பிஎம்ஏஒய்’ திட்டத்தின்கீழ் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு ரூ.250,000 (S$4,040) வரை மானியம் வழங்கப்படுகிறது.

