பஞ்சாப்பில் கார் வெள்ளத்தில் சிக்கியதில் 11 பேர் உயிரிழப்பு

1 mins read
72559ea4-cf33-403b-904d-18216b297f37
பஞ்சாப் மாநிலத்தின் ஜெய்ஜான் பகுதியில் உள்ள ஆற்றில் கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்ட கார். - படம்: ஊடகம்

சண்டிகர்: இமாச்சலப் பிரதேசத்தில் இருந்த மூன்று குடும்பத்தினர் பஞ்சாப் மாநிலத்தின் ஜெய்ஜான் சிற்றூருக்கு ஒரு திருமண விழாவில் பங்கேற்க காரில் சென்றனர். அந்த காரில் ஓட்டுநருடன் சேர்த்து 12 பேர் பயணம் செய்தனர்.

பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூர் அருகே ஜெய்ஜான் பகுதியில் உள்ள ஆற்றில், கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அந்தப் பயணத்தின்போது பஞ்சாப்பின் ஜெய்ஜான் தரைப்பாலத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அந்தப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாது, ஓட்டுநர் காரை வேகமாகச் செலுத்தினார். ஆற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தச் சம்பவத்தில் அந்த காரில் பயணம் செய்த 12 பேரில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார்.

ஆற்றில் மூழ்கிய சிறுமி உட்பட 11 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேச காவல்துறையினரும் அதிகாரிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டதாக அவ்வட்டார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆற்றின் குறுக்கே ஓட்டுநர் காரை செலுத்தியபோது அப்பகுதியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருந்தும் அவர், அதைப் பொருட்படுத்தாமல் காரை வேகமாக ஓட்டி ஆற்றைக் கடக்க முயற்சி செய்தார். அதனால்தான் இந்த மோசமான விபத்து ஏற்பட்டது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்