இந்தியாவுக்கு ஒவ்வோர் ஆண்டும் 40 புதிய போர் விமானங்கள் தேவை: படைத் தளபதி

இந்தியாவுக்கு ஒவ்வோர் ஆண்டும் 40 புதிய போர் விமானங்கள் தேவை: படைத் தளபதி

படம்: பிடிஐ

03 Oct 2026 - 8:03 pm

2 mins read

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 36 முதல் 40 போர் விமானங்கள் வரை தேவைப்படும் என்று இந்திய விமானப் படைத் தளபதி ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.

விமானப்படை தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (அக்டோபர் 3) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் , மேம்பட்ட நடுத்தர போர் விமானக் கொள்முதல் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டால், விமானப்படை வேறு தெரிவுகளைப் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

பல ஆற்றல்களை உள்ளடக்கிய ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்த நிதியாண்டிற்குள் இறுதிசெய்ய இந்தியா முயன்று வருவதாகவும் திரு சிங் தெரிவித்தார்.

இந்திய விமானப் படையின் போர்த்திறனை மேம்படுத்த பிரான்சிடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க நெடுங்காலத்துக்கு முன்னரே இந்தியா முயற்சிகளை மேற்கொண்டது.

ஆயினும், அதற்கான ஒப்புதலை இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திலேயே இந்தியா அளித்தது.

அதனைத் தொடர்ந்து, போர் விமானங்களை வாங்குவதற்கான விலை தொடர்பாகவும் பிற அம்சங்கள் பற்றியும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இது இந்தியாவின் ஆகப்பெரிய தற்காப்பு ஆயுதக் கொள்முதலாகக் கருதப்படுகிறது.

இந்தக் கொள்முதல் திட்டத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 3.25 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், இந்தியாவின் மொத்த ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 176ஆக உயரும்.

இந்திய விமானப்படையால் ஏற்கெனவே இயக்கப்படும் 36 ரஃபேல் விமானங்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களில் பயன்படுத்துவதற்காக இந்திய கடற்படை வாங்க இருக்கும் 26 ரஃபேல்-எம் போர் விமானங்களும் அதில் அடங்கும்.

114 ரஃபேல் விமானங்களில் 94 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது என்பது ஒப்பந்தத்தின் ஓர் அம்சம்.

“இந்தியாவுக்கு ரஷ்யா ‘எஸ்யு-57’ ரக விமானங்களை வழங்க முன்வந்துள்ளது. ஆனால் அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என்றார் அவர்.

குறைந்து வரும் போர் விமானங்களின் எண்ணிக்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த திரு சிங், வரும் ஆண்டுகளில் இந்திய விமானப்படைக்கு ஆண்டுதோறும் குறைந்தது 36 முதல் 40 போர் விமானங்கள் வரை தேவைப்படும் என்று கூறினார்.

ஒட்டுமொத்த ராணுவ வலிமையைப் பொறுத்தவரை விமானப் படை ஆற்றல் மிக முக்கியமானது என்றும் அதனை மேம்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தியாவிலேயே போர் விமானங்களுக்கான இயந்திரங்களைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் விமானப்படைத் தளபதி வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
ரஃபேல்போர் விமானம்விமானப் படை