அமெரிக்காவால் பனாமாவுக்கு நாடுகடத்தப்பட்ட 12 பேர் இந்தியா திரும்பினர்

2 mins read
e3718bdd-c8d2-4182-a69f-d91bd4a0cfae
அமெரிக்காவில் இருந்து பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தனர். - படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) இரவு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்த 12 பேரில், பஞ்சாபைச் சேர்ந்த நால்வரும் அடங்குவர். அவர்கள், உள்நாட்டு விமானம் மூலம் அமிர்தசரஸுக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவால் பனாமாவிற்கு நாடுகடத்தப்பட்ட 299 சட்டவிரோதக் குடியேறிகளில் இந்த 12 இந்தியர்களும் அடங்குவர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.

தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை அவரவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் மூன்று வெவ்வேறு விமானங்களில் ஏற்கெனவே 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்திய அதிகாரிகளின் முதற்கட்ட அறிக்கைகளின்படி, பஞ்சாபைச் சேர்ந்த நால்வரும் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வழியாக தென் அமெரிக்காவிற்குள் நுழைந்ததாகத் தெரிகிறது.

நாடு திரும்பிய நால்வரின் வருகையை உறுதிப்படுத்திய அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்சி சாவ்னி, அவர்கள் டெல்லியில் இருந்து வணிக விமானம் மூலம் ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்ததாகக் கூறினார்.

தங்களது பயணத்தை எளிதாக்கும் வகையில், அவர்கள் அனைவரும் சட்டவிரோதப் பயண முகவர்களுக்கு பெரும் தொகையைச் செலுத்தியதாக சாக்சி சாவ்னி மேலும் கூறினார்.

பிப்ரவரி 5, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மூன்று முறை சட்டவிரோத இந்தியக் குடியேறிகள் அமெரிக்காவிலிருந்து ராணுவ விமானத்தில் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சட்டவிரோத இந்தியக் குடியேறிகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதுகுறித்து பஞ்சாபில் உள்ள பல அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நாடு திரும்புபவர்களைத் தரையிறக்கச் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பினார். பஞ்சாப்மீது அவதூறு பரப்ப மத்திய அரசு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நாடு திரும்பும் தனது நாட்டினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்