சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 17 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அமிர்தசரஸ் மாவட்டம் மஜித்தா பகுதியில், திங்கட்கிழமை (மே 12ஆம் தேதி) இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றதாகவும் அங்கு ஆறு பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததாகவும் அமிர்தசரஸ் துணை காவல் ஆணையர் சாக்ஷி சாவ்னி கூறினார்.
மருத்துவக் குழுக்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் சில அறிகுறிகள் இருந்தாலும், தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
“கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களைக் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது,” என்றார் சாக்ஷி சாவ்னி.


