மும்பை: பயணிகளிடம் இருந்து பல்வேறு காரணங்களுக்காகப் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களைத் திருடிய 15 விமான நிலைய மூத்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மும்பை அனைத்துலக விமான நிலையத்தில் இந்த முறைகேடு நடந்துள்ளது.
பெரும்பாலான சம்பவங்களில், அதிகாரிகள் தங்கள் சொந்த பயன்பாட்டுக்காகப் பயணிகளின் பொருள்களை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பரபரப்பான மும்பை விமான நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். நாட்டின் பல நகரங்களுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் சென்று வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை நடவடிக்கையின்போது தடை செய்யப்பட்ட பொருள்கள் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட பயணியிடமிருந்து அவை பறிமுதல் செய்யப்படும். பின்னர் அந்தப் பொருள்கள் விமான நிலையப் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, பிறகு அழிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், பயணிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பல்வேறு பொருள்களை மூத்த அதிகாரிகள் சிலர் சொந்தப் பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்வதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை மேலதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 15 மூத்த அதிகாரிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

