ஹைதராபாத்: ஹைதராபாத் மாநில அரசாங்கத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தங்கள் பெற்றோரைக் கவனிக்கவில்லையென்றால் அவர்களுடைய சம்பளத்தில் 15 விழுக்காடு குறைக்கப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திங்கட்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்காக இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சியில், அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள கருவிகளை வழங்கினார்.
அந்த உரையில், “இந்த அரசு உங்களுக்காக உள்ளது என்பதை உரக்கக் கூறவே இந்தத் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். மாற்றுத் திறனாளிகள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொண்டால் அந்த இணையர்க்கு அரசு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கும். அதே சமயத்தில், மாற்றுத் திறனாளியை மணம் முடிப்பவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். அரசுப் பணியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
இதேபோன்று விளையாட்டுத் துறையில் சாதிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசுப் பணி ஒதுக்கப்படுகிறது. மேலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் அரசுப் பணியில் இட ஒதுக்கீடு, இந்திரம்மா வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
‘பிரணய்’ திட்டம் மூலம் முதியோரைப் பாதுகாக்க தெலுங்கானா அரசு தீர்மானித்துள்ளது. அதனால், இனி பெற்றோரை ஒதுக்கி வைத்தாலோ, ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்தாலோ கைவிட்டாலோ அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து 10 முதல் 15 விழுக்காடு பிடித்தம் செய்து, அந்தப் பணத்தை கைவிடப்பட்ட பெற்றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் பெற்றோரைக் கைவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. “பெற்றோர்களைக் கைவிடும் பிள்ளைகளை நாம்தான் வழிக்குக் கொண்டுவர வேண்டும். பெற்றோர்களுக்குப் பயன்படாதவர்கள், சமூகத்திற்கும் பயனற்றவர்களே,” என முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
மேலும், “ஒவ்வொருவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதே என் லட்சியம். சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி நம் மாநிலத்துக்கு நிதி வழங்க வேண்டும். நம்முடைய பிடிவாதத்தால்தான் மத்திய அரசு இறங்கி வந்து சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துகிறது,” என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசினார்.

