தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்பை மருத்துவமனையில் ரூ.1,500 கோடி மோசடிப் புகார்

2 mins read
ஏழு தாழிகளில் மனிதக் கூந்தல், மண்டையோடுகள்
a4b3adc1-bf01-49e3-b3c0-3691f3bca9df
லீலாவதி கீர்த்திலால் மேத்தா மருத்துவ அறக்கட்டளை தனது முன்னாள் நிர்வாகிகள்மீது புகார் அளித்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மும்பையின் புகழ்பெற்ற லீலாவதி மருத்துவமனையில் 1,500 கோடி ரூபாய்க்குமேல் (S$230 மில்லியன்) முறைகேடு நடந்துள்ளதாக அதன் முன்னாள் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர்மீது அமலாக்கத் துறையிடமும் காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

லீலாவதி கீர்த்திலால் மேத்தா மருத்துவ அறக்கட்டளையே இப்புகாரை அளித்துள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் மாந்திரீக வேலைகளை அவர்கள் மேற்கொண்டதாகவும் அறக்கட்டளை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையின் நிதி ஆவணங்களைத் தடயவியல் தணிக்கை செய்ததைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மும்பை பாந்த்ரா குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, லீலாவதி அறக்கட்டளை தனது முன்னாள் நிர்வாகிகள்மீது சில புகார்களை அளித்துள்ளது.

“லீலாவதி கீர்த்திலால் மேத்தா மருத்துவ அறக்கட்டளையின் நேர்மையை நிலைநிறுத்தவும் மருத்துவச் சேவைகளுக்கென ஒதுக்கப்படும் நிதி முழுமையாக நோயாளிகளின் நலனுக்குச் செலவிடப்படுவதை உறுதிசெய்யவும் கடப்பாடு கொண்டுள்ளோம்.

“தடயவியல் தணிக்கை மூலம் தெரியவந்துள்ள நடத்தைக்கேடும் நிதி முறைகேடும் அறக்கட்டளை முன்னாள் நிர்வாகிகளின் நம்பிக்கை துரோகத்தைக் காட்டுவதோடு, மருத்துவமனையின் குறிக்கோளுக்கு நேரடியாக விடுக்கப்பட்டுள்ள மிரட்டலாகவும் இருக்கிறது,” என்று அறக்கட்டளையின் நிரந்தர அறங்காவலரான பிரசாந்த் மேத்தா தெரிவித்துள்ளார்.

ஐந்துக்கு மேற்பட்ட தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறக்கட்டளையின் சட்டவிரோதக் குழுக்கள் ரூ.1,500 கோடிக்குமேல் மோசடி செய்திருப்பது தெளிவாகத் தெரிவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பணத்தைக் கையாடிய முன்னாள் நிர்வாகிகள் துபாயிலும் பெல்ஜியத்திலும் வசிக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனை வளாகத்தில் மாந்திரீக நடவடிக்கைகள் இடம்பெற்றது குறித்துக் கருத்துரைத்த திரு மேத்தா, அவ்வளாகத்தில் மனிதக் கூந்தலும் மண்டையோடுகளும் இருந்த ஏழுக்கும் மேற்பட்ட தாழிகளைத் தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் கூறினார்.

மோசடி, நிதி முறைகேடு தொடர்பில் பாந்த்ரா காவல் நிலையத்தில் மூன்று புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. விசாரணைக்காக அவ்வழக்குகள் பொருளியல் குற்றப் பிரிவிற்கு மாற்றிவிடப்பட்டுள்ளன.

மருத்துவமனை சார்ந்த கொள்முதல் தொடர்பில் வெளிநிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத வணிக நடவடிக்கைகள் வழி ரூ.1,200 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனிடையே, குஜராத்திலுள்ள அம்மருத்துவமனையின் கிளையிலிருந்தும் பொருள்கள் களவுபோனது குறித்து அம்மாநிலத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்