புவனேஸ்வர்: மூளைச்சாவு அடைந்த 16 மாத பச்சிளங் குழந்தையின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கியதை அடுத்து, இருவர் மறுவாழ்வு பெற்றனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த ஜன்மேஷ் லென்கா என்ற 16 மாதப் பெண் குழந்தைக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மார்ச் 1ஆம் தேதி, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர் பெற்றோர். எனினும், சிகிச்சை பலனின்றி குழந்தை மூளைச்சாவு அடைந்தது.
இதை உறுதி செய்த மருத்துவர்கள், குழந்தையின் பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து எடுத்துக் கூறினர்.
இதனால் துயரம் மிகுந்த சூழலிலும், மிகுந்த மன வலிமையுடனும் இரக்கத்துடனும் தங்கள் மகள் ஜன்மேஷ் லென்காவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர்.
இதையடுத்து, குழந்தையின் கல்லீரல், சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் இருவருக்கு பொருத்தப்பட்டன.
குழந்தையின் கல்லீரல் டெல்லியில் உள்ள, ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் கல்லீரல் செயலிழப்பால் உயிருக்குப் போராடிய மற்றொரு குழந்தைக்குப் பொருத்தப்பட்டதாகவும், சிறுநீரகங்கள் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளிக்குப் பொருத்தப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கொடையின் மூலம் 16 மாதக் குழந்தையாக இருந்தாலும், இரு மனித உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறாள் ஜன்மேஷ் லென்கா.