ஹைதராபாத்: பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு வெளியே மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்தில் நிகழ்ந்தது.
சிங்கராயப்பள்ளி எனும் சிற்றூரைச் சேர்ந்த ஸ்ரீநிதி, 16, என்ற அம்மாணவி காமாரெட்டியில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை (பிப்ரவரி 20) காலை வழக்கம்போல் பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். பள்ளியை நெருங்கியதும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட, அவ்விடத்திலேயே மயங்கிச் சரிந்தார்.
இதனை ஆசிரியர் ஒருவர் கவனித்துவிட்டார். உடனே ஸ்ரீநிதி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். முதற்கட்ட சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவரை இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல அங்கிருந்த மருத்துவர் பரிந்துரைத்தார்.
அதனையடுத்து, வேறு மருத்துவமனைக்கு ஸ்ரீநிதியைக் கொண்டுசென்றபோதும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. அவர் மாரடைப்பால் மாண்டுபோனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் ஸ்ரீநிதியின் உடல் அவரது சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இந்த வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்து பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சி தெரிவித்தனர்.
இதனிடையே, கடந்த ஈராண்டுகளில் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பது 22 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகப் பேராசிரியர் எம். ரபானி தெரிவித்துள்ளார்.
“நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஒருவர் ஒரு மணி நேரத்திற்குள் உயிரிழந்தால், அது திடீர் மாரடைப்பு என அழைக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. மூச்சுவிட சிரமமாக உள்ளது என்றும் நெஞ்சு வலிக்கிறது என்றும் ஒரு குழந்தை சொன்னால், அவரை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்,” என்று பேராசிரியர் ரபானி அறிவுறுத்தியுள்ளார்.

