ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 18 பெண்கள் பிரசவத்திற்குப் பின்னர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஏழு பெண்கள் பிரசவத்திற்குப் பின் சிறுநீரகச் செயலிழப்பிற்கு ஆளாகி, அதற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்மைய புள்ளிவிவரங்கள் மூலம் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்கள் குறுகியகால இடைவெளியில் உயிரிழப்பது பெரும் வியப்பையும் கவலையையும் அளித்துள்ளதாக ராஜஸ்தான் மாநிலச் சுகாதார அமைச்சர் கஜேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் வெப்ப அலை காரணமாக அந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதியதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது வெயிலின் தாக்கம் குறைந்த பிறகும் உயிரிழப்பு தொடர்வதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.
உயிரிழந்த தாய்மார்களின் ரத்தப் பரிசோதனை அறிக்கைகள் சீராக இருப்பதாகவும் இந்தத் தொடர் மரணங்களின் பின்னணியில் உள்ள மூலக் காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட மருத்துவ நிபுணர்களின் உதவியை நாடியுள்ளதாகவும் ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

