1997 கைதி துன்புறுத்தல் வழக்கு: குற்றச்சாட்டிலிருந்து காவல்துறை அதிகாரி விடுவிப்பு

1 mins read
c04206db-8363-4e67-b1b9-34b03e4e549a
முன்னாள் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட். - படம்: sanjivbhattips / ஃபேஸ்புக்

போர்பந்தர் (இந்தியா): இந்தியாவில் 1997ஆம் ஆண்டு விசாரணைக் கைதி துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் காவல்துறை அதிகாரியான சஞ்சீவ் பட் இப்போது குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் நகர நீதிமன்றம் ஒன்று அவ்வாறு தீர்ப்பளித்தது. வழக்கில் போதுமான ஆதாரம் இல்லாததால் பட் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அந்த நீதிமன்றம் குறிப்பிட்டது.

சம்பவம் நிகழ்ந்த காலத்தில் பட்,போர்பந்தர் நகர காவல்துறைக் கண்காணிப்பாளராக சூப்பரின்டெண்டன்ட்டாகப் (Superintendent of Police) பதவி வகித்தார். உண்மையை வெளிக்கொண்டுவர மோசமான காயங்களை விளைவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், போதுமான ஆதாரம் இல்லாததால் பட்டைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க முடிவெடுத்ததாக நீதிபதி முக்கே‌ஷ் பாண்டியா தெரிவித்தார்.

குஜராத்தின் ஜாம்நகரில் விசாரணைக் கைதி மாண்டதன் தொடர்பில் பட்டுக்கு முன்னதாக 1990ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரைக் குற்றவாளி என ஜோடிக்க போதைப்பொருள் வைத்ததன் தொடர்பில் 1996ல் அவருக்கு 20 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பட், தற்போது ராஜ்கோட் மத்தியச் சிறையில் ஆயுள் தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்