புதுடெல்லி: மத்திய கிழக்குப் பகுதியில் நீடிக்கும் பதற்றச் சூழல் காரணமாக 25 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வறுமையில் வாடக்கூடிய அபாயம் நிலவுவதாக ஐநா எச்சரித்துள்ளது.
மனித மேம்பாடு தொடர்பான நடவடிக்கைகளில் இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ‘மத்திய கிழக்கில் ராணுவப் பதற்றம் அதிகரித்தல்: ஆசிய, பசிபிக் வட்டாரங்களில் மனித மேம்பாட்டில் ஏற்படும் தாக்கங்கள்’ என்ற தலைப்பிலான அறிக்கையில், மத்திய கிழக்கு மோதலால் ஆசியா, பசிபிக் வட்டாரங்களில் மனித மேம்பாட்டு நடவடிக்கைகளில் புதிய அழுத்தங்கள் நிலவுவதாக ஐநா தெரிவித்தது.
முதற்கட்ட மதிப்பீட்டின்படி, உலகளவில் ஏறக்குறைய 88 லட்சம் மக்கள் வறுமையில் தள்ளப்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலைமை தீவிரமடைவதால் ஆசிய-பசிபிக் வட்டாரங்களில் ஏறக்குறைய 299 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படக்கூடும் என்றும் ஐநா எச்சரித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு, உணவுப்பொருள் பற்றாக்குறை எனப் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக மக்களின் வாங்கும் திறன் வெகுவாகக் குறையக்கூடும் என்றும் இது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
எனவே, இந்தியாவில் நான்கு லட்சம் பேர் முதல் 25 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்றும் சீனாவில் 6 லட்சம் பேர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பதுடன், சுற்றுலா, உணவுப் பதப்படுத்துதல், எஃகு உற்பத்தி போன்ற துறைகள் பாதிப்படைந்து வேலையின்மை அதிகரிக்கக்கூடும் என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது.

