தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அல்லு அர்ஜுனிடம் 2 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை

2 mins read
88b353c2-f47c-4c9e-b80e-ab2b97f05a95
அல்லு அர்ஜுனிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. - கோப்புப் படம்: பிடிஐ

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனிடம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) காவல்துறை இரண்டு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியது.

திரையரங்கில் ஒரு பெண் உயிரிழந்தது தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இம்மாதம் 5ஆம் தேதி , நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது.

வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்துக்கு தெலுங்கானா அரசும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில் இம்மாதம் 4ஆம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

அவரது மகன் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

அல்லு அர்ஜுன் படத்தைப் பார்க்கச் சென்றதால் ரேவதி உயிரிழந்ததாகக் கூறி காவல்துறையினர் இம்மாதம் 13ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் காவல்துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியது.

அதில் டிசம்பர் 24 செவ்வாய்க் கிழமை காலை 11.00 மணிக்கு முன்னிலையாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் முன்னிலையானார். இந்த விசாரணை ஒரு மணி நேரம் நடைபெறும் என கூறப்பட்டது.

ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த விவகாரம் தொடர்பில் சட்டமன்றத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “காவல்துறை அனுமதி மறுத்த பிறகும் அல்லு அர்ஜுன் படம் பார்க்கச் சென்றார். திரையரங்குக்கு வெளியே ஒருவர் உயிரிழந்த பின், வீட்டுக்குச் செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தியும் அதை அவர் கேட்கவில்லை. அப்போது கூட காரில் ஏறி, ரசிகர்களுக்கு கையசைத்தவாறே சென்றார். இதனால் மேலும் பிரச்சினை தலைதூக்கியது. அல்லு அர்ஜுன் என்ன மாதிரியான மனிதர்,” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அல்லு அர்ஜுன், “இந்த விவகாரத்தில் தவறான செய்திகள் பரப்பப்படு கின்றன. என்னைக் கெட்டவனாகச் சித்திரிக்கச் சதி நடக்கிறது. எனக்கும் குடும்பம் இருக்கிறது. மனைவி, குழந்தையின் இழப்பு எவ்வளவு துயரமானது என்று உணர முடியும். மனித நேயமற்றவன், மோசமானவன் என என்னைச் சித்திரிக்க முயல்வதை நிறுத்துங்கள்,” என்று தெரிவித்திருந்தார்.

உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார்.

சம்பவத்தின்போது தான் திரையரங்கத்திற்குள் இருந்ததாகவும் வெளியே நடைபெற்ற அசம்பாவிதம் தனக்குத் தெரியாது என்றும் அல்லு அர்ஜுன் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்