புதுடெல்லி: இந்தியாவில் உடற்பயிற்சியோ நடைப் பழக்கமோ இல்லாமல் கிட்டத்தட்ட 20 கோடிப் பேர் வாழ்ந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஆசியா பசிபிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் அண்ட் சொசைட்டி ஆக்சிலரேட்டர் என்னும் தொண்டு நிறுவனம் இணைந்து, இந்தியாவில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் மக்கள் எந்தளவுக்கு ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டது.
தமிழகம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெற்றோர்கள், மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரிடம் குழு விவாதம் நடத்தி விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் தங்கள் பள்ளியில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று 67 விழுக்காடு மாணவர்கள் தெரிவித்தனர். தங்கள் பள்ளியில் விளையாட்டுத் திடலே இல்லை என்று 21% மாணவர்கள் தெரிவித்தனர்.
அனைத்துலக விதிமுறைகளின் படி 20 கோடி இந்தியர்கள் சோம்பலான வாழ்க்கை வாழ்வது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
முக்கியமாக நகர்ப்புறங்களில் வாழும் பெண்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ‘ஆசியா பசிபிக்’ அமைப்பின் மண்டல இயக்குநர் சுவேதா கூறுகையில், “விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை எல்லாம் கல்விக் கூடங்களின் நடவடிக்கைகள் என்ற கருத்து நம்மிடம் உள்ளது.
“இதுபோன்ற எண்ணம் ஒழிக்கப்பட வேண்டும். உண்மையில் உடல் உழைப்பும் உடற்பயிற்சியுமே கல்வியில் நம்மைச் சிறக்கச் செய்கிறது. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை உடலியல் மாற்றங்கள், மனநிலைக் கட்டுப்பாடு, மனபலம், அறிவாற்றல் மேம்பாடு ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது,” என்றார் சுவேதா.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்துப் பேசிய ‘ஸ்போர்ட்ஸ் அண்ட் சொசைட்டி ஆக்ஸிலரேட்டர் ‘அமைப்பின் துணை நிறுவனர் தேஷ் கௌரவ் சேக்ரி, விளையாட்டு மற்றும் உடல் உழைப்பில் நகரத்தில் வாழும் பெண்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
இதற்கு விளையாட்டுத் திடல்கள், நடைபாதைகள், பூங்காக்கள் பற்றாக்குறையே முக்கிய காரணம். அதோடு, பாதுகாப்பின்மை, அச்சம் போன்றவற்றால் பலர் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியப் பெண்கள் தங்களின் 3ல் இரண்டு பங்கு நேரத்தை வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கவனிப்பதில் செலவிட நேரிடுகிறது. இதற்குக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேலையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
கிராமங்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் உடல் உழைப்பு இல்லாத நிலை இரு மடங்காக உள்ளது. ஆகையால், பள்ளிகளில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கௌரவ் சேக்ரி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் அளவுக்கு அதிகமான எடை கொண்டவர்கள் என்று ஆய்வு காட்டுவதாக 2024 மார்ச் மாதம் லான்செட் என்னும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது.

