$20 மில்லியன் மோசடி: எவரெஸ்ட் மலையேறிகளுக்கு நச்சுணவு தந்த வழிகாட்டிகள்

$20 மில்லியன் மோசடி: எவரெஸ்ட் மலையேறிகளுக்கு நச்சுணவு தந்த வழிகாட்டிகள்

2 mins read
வெளிச்சத்துக்கு வந்த காப்புறுதி மோசடி
07813596-9b52-49f0-bc1f-cec01011550c
வழிகாட்டும் ஷெர்பாக்கள், மலையேற்ற நடவடிக்கைக்கான நிறுவனங்கள், ஹெலிகாப்டர் நிறுவனங்கள், மருத்துவ ஊழியர்கள் எனப் பல தரப்பினர் அனைத்துலகப் பயணிகளைச் சதிவலையில் வீழ்த்தியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: நேப்பாளக் காவல்துறையினர், எவரெஸ்ட் சிகரத்துக்குச் செல்லும் மலையேறிகள் தொடர்பிலான காப்புறுதி மோசடித் திட்டத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

‘ஷெர்பா’ எனப்படும் நேப்பாள வழிகாட்டிகள் மலையேறிகளுக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைய வழிகாட்டுவது வழக்கம். அத்தகைய வழிகாட்டும் ஷெர்பாக்கள், மலையேற்ற நடவடிக்கைக்கான நிறுவனங்கள், ஹெலிகாப்டர் நிறுவனங்கள், மருத்துவ ஊழியர்கள் எனப் பல தரப்பினர் அனைத்துலகப் பயணிகளைச் சதிவலையில் சிக்கவைத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மலையேறிகளின் உடல்நலம் பாதிக்கும் வண்ணம் அவர்கள் தேவையற்ற சிக்கலை வேண்டுமென்றே ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அவசரநிலை உருவாகும்படி அவர்கள் சதித்திட்டம் தீட்டியதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தச் சதி தொடர்பில் 32 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மோசடி வலையின் விவரங்கள்

மலையேறிகளுக்கு அளிக்கப்படும் உணவில் குடல் அழற்சியை ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருள்களை வழிகாட்டிகள் கலந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மலையேறிகளுக்கு வாந்தி, மயக்கம், உடல் சோர்வு போன்றவை ஏற்படும்.

இவை கடல்மட்டத்தைவிட அதிகமான உயரத்தில் இருக்கும்போது ஏற்படக்கூடிய உயிருக்கு அபாயம் விளைவிக்கும் உடல்கோளாற்றினால் ஏற்படும் அறிகுறிகளைப் போன்றே இருப்பதால் பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்ற உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றும் சூழல் உருவாகிறது.

உயிர்காக்கும் நடவடிக்கைபோல் இது சித்திரிக்கப்படும்.

போலி ஆவணங்கள், காப்புறுதி வழங்குதொகையும்

மேலும், இவ்வாறு ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் போலியான மருத்துவ அறிக்கைகளையும் வான்வழி மீட்புக்கான கட்டண அறிக்கைகளையும் மோசடிக்காரர்கள் தயாரித்ததாக அதிகாரிகள் கூறினர்.

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கை என்று காவல்துறை குறிப்பிட்டது. இதன் மூலம் மோசடிக்காரர்கள் கிட்டத்தட்ட 20 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையைச் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது. இமயமலை வட்டாரச் சுற்றுப்பயணத்துடன் தொடர்புடைய ஆகப் பெரிய மோசடிச் சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்