ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தனியார் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் மாண்டனர். சிலர் பலத்த காயமடைந்தனர்.
அக்டோபர் 14ஆம் தேதி, சிங்கப்பூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு ராஜஸ்தானின் ஜெய் சால்மர் பகுதியிலிருந்து 57 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று ஜோத்பூர் சென்றது.
தையாத் பகுதியில் இருக்கும் இந்திய ராணுவ நிலையம் அருகே அப்பேருந்து திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.
இதில், மூன்று பெண்கள், பிள்ளைகள் மூவர் உட்பட 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெய்சால்மரில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சிங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், காயமடைந்தவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை வழங்க உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இந்தக் கடினமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.