தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மார் இணைய மோசடிக் குழுவிடம் சிக்கியுள்ள 2,000 இந்தியர்கள்

1 mins read
3fbc1c02-d019-4784-b519-0a28592bf38b
பெரும்பாலானோருக்குத் தாங்கள் எதிர்கொண்டுள்ள ஆபத்து எத்தகையது என்பது குறித்த புரிதல் இல்லை என மியன்மாரில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. - சித்திரிப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: மியன்மாரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இணைய மோசடிக் கும்பல்களிடம் 2,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை பார்த்து வருவது தெரிய வந்துள்ளது.

மியன்மார், தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மியாவாடி, ஆயுதம் ஏந்திய குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்குதான் இந்திய குடிமக்கள் பலர் இணைய மோசடிக்காரர்களிடம் சிக்கியுள்ளனர். எனினும், இவர்களில் சிலர் தாமாக விரும்பி, இந்த மோசடியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

பெரும்பாலானோருக்குத் தாங்கள் எதிர்கொண்டுள்ள ஆபத்து எத்தகையது என்பது குறித்த புரிதல் இல்லை என அங்குள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இத்தகையவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்லர் என்றும் அவர்கள் குற்றவாளிகள் என்றும் தூதரகம் தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் கவலை தெரிவித்துள்ளது.

மியன்மார், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெறுவோர் அனைத்து விவரங்களையும் ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டியது அவசியம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் இணைய மோசடிகளில் ஈடுபட்டது தெரிய வந்தால் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்க நேரிடும் என்றும் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மியன்மார், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இணைய மோசடிக் கும்பல்களிடம் சிக்கிய இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை முதல், இந்நாடுகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்திய, அமெரிக்க குடிமக்களை இணையம்வழி தொடர்புகொண்டு மோசடி செய்ய இந்தியர்களை மியன்மார் கும்பல் கட்டாயப்படுத்துவதாக இந்திய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்