2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 12 பேர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

2 mins read
a7e64ad5-9466-4001-ae73-e38fb9b314f5
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பில் 187 பேர் கொல்லப்பட்டனர். - படம்: இந்து / இணையம்

மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ரயில் வெடிகுண்டுத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அச்சம்பவத்தில் 187 பேர் கொல்லப்பட்டனர், 800க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கு 2015ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதர எழுவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகளைக் கொண்ட குழு அந்த 12 பேருக்கும் விதிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் புரிந்ததை நிரூபிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் முழுதாகத் தவறிவிட்டனர் என்று மும்பை உயர்நீதிமன்றம் சாடியது.

2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி மும்பையில் மாலை உச்சநேரத்தில் கூட்டமாக இருந்த ரயில்களில் ஏழு முறை வெடிப்பு ஏற்பட்டது. அச்சம்பவம், இந்தியா சந்தித்துள்ள ஆக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாகும்.

ஏழு குக்கர்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு, அவை பைகளில் வைக்கப்பட்டிருந்தன. வெடிகுண்டுகள் ஆறு நிமிட இடைவெளியில் வெடித்தன.

மும்பையின் மாட்டுங்கா, கர், மாகிம், ஜோகே‌ஷ்வரி, பொரிவாலி, மிரா ரோடு ஆகிய பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டது. பெரும்பாலான வெடிகுண்டுகள் ஓடும் ரயில்களில் வெடித்தன. இரு வெடிகுண்டுகள் ரயில் நிலையங்களில் வெடித்தன.

ரயில்களின் முதல்நிலைப் பெட்டிகளைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. மும்பையின் நிதி வட்டாரத்திலிருந்து மக்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் வெடிப்புகள் நிகழ்ந்தன.

அத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாதிகள்தான் காரணம் என்று இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டின. அதை பாகிஸ்தான் மறுத்தது.

வெடிப்புகளுக்கு சற்று நேரம் கழித்து கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்போதிலிருந்து சிறையில் இருந்துவந்துள்ளனர். அவர்களில் ஒருவரான கமால் அன்சாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2021ஆம் ஆண்டு கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பலியானார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொலை செய்தது, திட்டம் தீட்டியது, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தது ஆகிய குற்றங்களைப் புரிந்ததாக 2015ஆம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்துமாறு அரசுத் தரப்பு வேண்டுகோள் விடுத்தது.

குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட பிரதிவாதி தரப்பு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த மும்பை உயர்நீதிமன்றம் சென்ற ஆண்டு ஜூலை மாதம் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட குழுவை நியமித்தது.

குறிப்புச் சொற்கள்