123 ஆண்டுகளில் ஆக வெப்பமானது 2024: இந்திய வானிலை நிலையம்

2 mins read
50a9cdc5-a6aa-4213-937b-db642177878e
1901ஆம் ஆண்டுக்குப்பின் 2024ல்தான் ஆக அதிகமான வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. - படம்: இந்து தமிழ் திசை இணையத்தளம்

புதுடெல்லி: 1901ஆம் ஆண்டுக்குப்பின் சென்ற ஆண்டுதான் (2024) இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024ல் அதிக வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு நிலையத் தலைவர் மிருத்யஞ்சய் மொஹபத்ரா, செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சென்ற ஆண்டில் இந்தியா முழுவதும் சராசரியாக தரைக்காற்றின் வெப்பநிலை நீண்டகாலச் சராசரியைவிட அதிகமாகப் பதிவானதாக அவர் கூறினார்.

இது கடந்த 1901ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலகட்டத்தில் பதிவானதைவிட 0.65 டிகிரி செல்சியஸ் அதிகம் என்றார் அவர்.

மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 2025 ஜனவரியில் வழக்கத்தைவிடக் கூடுதலான வெப்பநிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடமேற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகள், தென்னிந்தியாவின் மத்தியப் பகுதிகள் தவிர பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தைவிடக் குறைவான வெப்பநிலை நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.

புதைபடிம எரிபொருள்களை எரிப்பதால் பூமி வெப்பமடைகிறது என்றும் கூடுதல் வெப்பத்தால் காற்றுமண்டலமும், கடற்பரப்பும் பாதிக்கப்படுகின்றன என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

கதகதப்பான காற்று கூடுதலான ஈரப்பதத்தை ஈர்க்கும். கடல் வெப்பமடைதலால் கூடுதலான நீர் ஆவியாகும். இதனால் அதி கனமழைச் சம்பவங்கள் அதிகரிக்கும் என்று கூறும் அவர்கள் புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து மாற்று எரிபொருள்களைப் பயன்படுத்தும்படி ஆலோசனை கூறியுள்ளனர்.

இதை, 2025ஆம் ஆண்டுக்கான மிக முக்கியமான உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டால்தான் உலகைப் பாதுகாப்பான, நிலையான வசிப்பிடமாக மாற்றமுடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

ஏற்கெனவே ஐரோப்பாவின் காலநிலைக் கணிப்பு அமைப்பான கோப்பர்னிகஸ், 2024ஆம் ஆண்டுதான் உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டு என்று கூறியிருந்தது.

சென்ற ஆண்டு (2024) முதன்முறையாக தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய அனைத்துலகச் சராசரி வெப்பநிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் கூடுதலான வெப்பநிலை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் உலக அளவில் 41 நாள்கள் அதிக வெப்பமான நாள்களாக அமைந்தன.

ஒப்புநோக்க, 2023ஆம் ஆண்டில் 26 நாள்களில் அதிக வெப்பம் பதிவானது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்