இந்திய - ஐரோப்பிய ஒன்றிய நல்லுறவு 2026ல் செழித்தோங்கும்: ஜெய்சங்கர் உறுதி

2 mins read
60274824-cb7a-4947-bc63-07d7be35f33f
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர். - படம்: ஜெய்சங்கர்/எக்ஸ்

லக்சம்பர்க்: இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான உறவு 2026ல் ஏறுமுகத்தில் இருக்கும் என்றும் இருதரப்புக்கும் இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ், லக்சம்பர்க்கிற்கு ஆறு நாள் அதிகாரத்துவ சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர். அப்போது அந்நாட்டுப் பிரதமர் லுக் ஃபிரெய்டன், வெளியுறவு அமைச்சர் ஜேவர் பெத்தேல் ஆகியோரைச் சந்தித்து அவர் நீண்டநேரம் உரையாடினார்.

மேலும், பயணத்தின் ஓர் அங்கமாக லக்சம்பர்க்கில் உள்ள இந்தியச் சமூகத்தினரையும் சந்தித்த திரு ஜெய்சங்கர், உலகில் நிலவும் நிச்சயமற்ற சூழல், புவிசார் அரசியல் பதற்றம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி, அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாடும் வட்டாரமும் அதனதன் நலன்களையும் இலக்குகளையும் மறுஆய்வு செய்து வருவது குறித்து விளக்கினார்.

‘‘அவ்வகையில், அச்சுறுத்தும் சூழ்நிலைகளைக் களைவது மட்டும் போதாது. உலக நாடுகளுடன் நாம் நெருக்கமான நட்பையும் ஆழமான கூட்டாண்மைகளையும் உருவாக்கிட  வேண்டும்,” என்றார் திரு ஜெய்சங்கர்.

“அப்படியானால், நாம் மற்றவர்களைவிட மிகவும் அதிகமாக நம்பக்கூடிய வேறு குறிப்பிட்ட நாடுகள், இருதரப்பு உறவுகள் உள்ளனவா?’’ என்று வினவிய அமைச்சர், ‘‘தற்போதைய நிலை பொதுவாகவே இந்தியாவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் மிகவும் அணுக்கமாக ஒன்றிணைக்கின்றது,’’ என்று தாம் கருதுவதாகவும் சொன்னார்.

எனவே, 2026ஆம் ஆண்டு ஐரோப்பாவுடனான உறவுகளில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தைக் காணும் என்பதில் தாம் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னார்.

மேலும், அந்நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் நலன் தொடர்ந்து பேணப்படும் என்று உறுதியளித்த திரு ஜெய்சங்கர், ‘‘ஐரோப்பாவைப் பொறுத்தமட்டில், இந்தியத் தரப்பிலிருந்து நேரம், ஆற்றல், கவனம் எனப் பேரளவில் செயல்திறன்மிக்க முதலீட்டை இந்தியச் சமூகத்தினர் காண இயலும்,” என்று உறுதியளித்தார்.

அயல்நாட்டில் இந்தியச் சமூகத்தினரைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியல், வணிகம், தொழில்நுட்பத் துறைகளில் லக்சம்பர்க்குடனான இந்தியாவின் ஒத்துழைப்பு வலுவடைவதைச் சுட்டிய திரு ஜெய்சங்கர், அதற்குப் பங்களிக்கும் வெளிநாடுவாழ் இந்தியச் சமூகத்தினர்க்கும் பாராட்டு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்