புதுடெல்லி: இருபது நாள்களுக்கு மேல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக்கை மருத்துவமனையில் சேர்த்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை (ஜூலை 18) காலை வலுக்கட்டாயமாக டெல்லி காவல்துறை அதிகாரிகளால் அவர் டெல்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நீண்ட நாள்களாக உண்ணாவிரதம் இருந்ததால் ஏற்பட்ட உடலியல் ரீதியான அழுத்தம், பாதிப்புகள் காரணமாக அவரது ரத்த அளவீடுகளில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) தெரிவித்தது.
சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவும், எய்ம்ஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு நிபுணரும் பலமுறை ஆலோசனைகளை வழங்கினாலும் வாங்சுக், நரம்பு வழி திரவங்கள், வாய்வழி அனைத்து மருந்துகளையும் உட்கொள்ள மறுத்துவிட்டார் என்று மருத்துவமனை மேலும் கூறியது.
அவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சைக்கு அவரது குடும்பத்தினர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சனிக்கிழமை மருத்துவமனை தெரிவித்திருந்த நிலையில் மறுநாளே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்றும் இந்தச் சர்ச்சையுடன் தொடர்புடைய மாணவர்களின் மரணங்களைக் கண்டித்து சிஜேபி தலைமையிலான போராட்டத்திற்கு ஆதரவாகவும் சோனம் வாங்சுக் ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, மருத்துவ ஆலோசனையின்பேரில் அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்னதாக, வாங்சுக்கிற்கு எந்தவொரு மருத்துவ சிகிச்சையையும் அளிப்பதற்கு முன்பு மருத்துவர்கள் தன்னிடமும் தனது குடும்பத்தினரிடமும் கட்டாயம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே சோனம் வாங்சுக் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகக் குற்றம்சாட்டி அவரை அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக அவரது மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில் திங்கட்கிழமை (ஜூலை 20) தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல ஜந்தர் மந்தரில் ஒன்று கூடுமாறு கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் திப்கே, சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ ஆகியோர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பேரணிக்கு எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்று காவல்துறை கூறியது.
இரண்டு நாள்களுக்கு முன்பு சோனம் வாங்சுக்கின் உயிரைக் காப்பாற்ற “என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என்று டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

