புதுடெல்லி: மத்திய கிழக்கு வட்டாரத்தில் நடைபெற்றுவரும் பூசலில் 14 கடலோடிகள் உட்பட 22 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டனர்..
அண்மைத் தாக்குதலில் சவூதி அரேபியாவில் மூன்று இந்தியர்கள் மாண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு புதன்கிழமை (அக்டோபர் 28) தெரிவித்தது.
எரிசக்தி உள்கட்டமைப்பு, கப்பல் வழித்தடங்கள் மீதான தாக்குதல்களால் நாடுகளிடையே வட்டாரப் பாதுகாப்பு, கடல்வழி வணிகம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
“மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதல் குறித்து நாங்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளோம்,” என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். வளைகுடா பகுதியில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்காக அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் திரு ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் ஈரான்மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய மத்திய கிழக்கு மோதலைத் தீர்க்க பேச்சுவார்த்தையையும் அரசதந்திர வழிமுறைகளையும் நாட வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பொது உள்கட்டமைப்பு, பொருளியல் சொத்துகள் மீதான தாக்குதல்கள் குறித்தும் புதுடெல்லி கவலை தெரிவித்துள்ளது.
மோதல் அதிகரித்தால் வட்டார நிலைத்தன்மைக்கும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.
சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய்க் குழாய்மீது ஏமனின் ஹூதி போராளிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்தே இந்தக் கவலைகள் எழுந்துள்ளன.
செங்கடலில் உள்ள ஏற்றுமதி முனையங்களுக்குக் கச்சா எண்ணெய்யைக் கொண்டுசெல்ல அந்தக் குழாய் முக்கியப் பாதையாகும்.
ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் வட்டார எண்ணெய் ஏற்றுமதியும் சிக்கலாகியுள்ளது.
அனைத்துலகக் கப்பல் துறையில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதால், இந்தியக் கடலோடிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பிம்கோ-ஐசிஎஸ் 2026ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியா 311,936 கடல்துறை வல்லுநர்களைக் கொண்டுள்ளது. இது உலகளாவிய கடலோடிகளில் 12.16 விழுக்காடு ஆகும்.
