புதுடெல்லி: இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) மூத்த மேலாளரான ராகுல் விஜய், ஆணைய நிதியைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர், ரூ. 232 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டேராடூன் விமான நிலையத்தில் பணியில் இருந்த காலக்கட்டத்தில், விமான நிலைய ஆணையத்தின் அதிகாரபூர்வ மின்னணு பதிவுகளை மாற்றி அமைத்தார் என்பது ராகுல் விஜய் மீதான புகார்.
இதன் மூலம் விமான நிலைய ஆணையத்தின் நிதியைத் திருடும் வகையில் முறையாக திட்டமிட்ட, தொடர்ச்சியான மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த “2019-20 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில், டேராடூன் விமான நிலையத்தில் பணியில் இருந்தார் ராகுல் விஜய். அப்போதுதான் மின்னணுப் பதிவுகளை மாற்றிக் கையாள்வதில் தனக்கு உள்ள திறனை அவர் வெளிப்படுத்தியாகவும் போலியான, கற்பனையான சொத்துகளைப் பதிவு செய்வது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக, தாம் பதிவு செய்யும் சொத்துகளின் மதிப்பையும் மாற்றி அமைத்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ராகுல் விஜய், விமான நிலைய ஆணையத்தின் நிதியில் இருந்து ஏறக்குறைய ரூ.232 கோடியை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளது தெரியவந்திருப்பதாக சிபிஐ கூறுகிறது.
இது தொடர்பாக வங்கிப் பரிவர்த்தனைப் பகுப்பாய்வும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக ஆகஸ்ட் 28ஆம் தேதி ராகுல் விஜய்யின் அலுவலகம், குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டது.