உதய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் உதய்ப்பூர், பரத்பூர் நகரங்களில் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 2) நடந்த வெவ்வேறு திருமண நிகழ்வுகளில் 250க்கும் அதிகமானோர் நச்சுணவு காரணமாக நோய்வாய்ப்பட்டனர்.
அவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நோய்வாய்ப்பட்டோரில் பெரும்பாலானோர் பெண்கள், சிறார் என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.
தன்மண்ட் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டோருக்குச் சிகிச்சை அளிப்பதற்கு நோயாளிகளுக்கான புதிய அவசர உதவி தங்குமிடத்தை அமைத்ததாக உதய்ப்பூரின் எம்பி (MB) மருத்துவமனை அதிகாரிகள் கூறினர். நோய்வாய்ப்பட்டோரில் 27 பேரைத் தவிர எஞ்சியோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் 15 வயதுப் பெண் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த பெண்கள், சிறார்தான் ஆக அதிகம் பாதிக்கப்பட்டதாக மருத்துவ அதிகாரி ஒருவர் சொன்னார்.
இதேபோல் பரத்பூர் நகரில் உள்ள காஸிபூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்றோரும் நச்சுணவால் நோய்வாய்ப்பட்டனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுக்கள் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்றன.
காஸிபூரில் நோய்வாய்பட்டரில் 17 பேர் நட்பாய் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர்.

