ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 2,500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மிகவும் பழுதடைந்த நிலையிலும், ஏறக்குறைய 300 பள்ளிகளுக்குச் சொந்தமாக கட்டடங்கள் இல்லாமலும் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளின் இந்நிலை குறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. அதில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தன.
இதையடுத்து, அக்கட்சி சார்பில் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.
மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரில், ராம்புரா கன்வார்புரா கிராமத்தில் மாட்டுத்தொழுவத்தில் இயங்கி வந்த பள்ளியை ஆய்வு செய்யச் சென்ற சிஜேபி குழுவினர் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாநிலக் கல்வித் துறையின் அவல நிலை வெளிச்சத்திற்கு வந்தது.
அரசு வெளியிட்ட சீரமைப்புத் திட்டம்
அரசு வெளியிட்ட வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், மோசமான நிலையில் உள்ள பள்ளிகளை மேம்படுத்த அரசு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.
பழுதடைந்துள்ள 2,500 பள்ளிகளைப் புதுப்பித்துச் சீரமைக்க ரூ.550 கோடி நிதியும் சொந்தக் கட்டடம் இல்லாத, மோசமான நிலையிலுள்ள 300 பள்ளிகளுக்குப் புதிய கட்டடங்கள் அமைக்க ரூ.450 கோடி நிதியும் செலவிடப்பட உள்ளது.
1,500க்கும் மேற்பட்ட வகுப்பறைகள், அறிவியல், கணினி ஆய்வகங்கள் அமைக்கத் தனியாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் அரசின் அலட்சியப்போக்கே இத்தகைய நிலைக்குக் காரணம் எனத் தற்போதைய பாஜக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநிலக் கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்திப் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்க்கட்சியினர் எச்சரித்துள்ளனர்.


