கடற்படைக்குப் புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்

2 mins read
1c779f37-fa2c-4571-a8db-6d10c0e229c2
டிசம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையின் ‘விஷன் 2047’ என்ற பெயரில் கடற்படையின் வளர்ச்சி குறித்த தகவல்களை இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி திங்கட்கிழமை வெளியிட்டார். - படம்: திஇந்து

புதுடெல்லி: இந்தியக் கடற்படைக்காக 26 நவீன ரஃபேல் போர் விமானங்களையும் மூன்று அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களையும் ரஷ்யாவிடம் இருந்த வாங்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் வரும் ஜனவரியில் கையெழுத்தாகக் கூடும். இதனைக் கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியக் கடற்படை தினம் புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கடற்படைத் தளபதி தினேஷ் குமார் திரிபாதி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து இந்தியக் கடற்படையின் முன்னேற்றம் குறித்துப் பேசினார்.

மேலும், 2025ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் ஒரு போர்க்கப்பலை கடற்படையில் இணைக்கும் வகையில், இப்போது 62 போர்க்கப்பல்களும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் தயாரிப்புப் பணியில் உள்ளன என்றார் திரிபாதி.

அத்துடன் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் அணுசக்தித் தாக்குதல் மேற்கொள்ளும் நவீன நீர்மூழ்கிக் கப்பல் 2036-37 ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்றார்.

நாட்டின் இரண்டாவது அணுசக்தி ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிகாட் சில நாட்களுக்கு முன்பு நீர்மூழ்கிக் கப்பல் பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாகச் செலுத்தியதாக திரிபாதி தெரிவித்தார்.

மேலும், சீனப் போர்க்கப்பல்கள் இந்திய பெருங்கடலின் பன்னாட்டு எல்லைப் பகுதிகளில் சுற்றித்திரிவது கவலைக்குரியது. அவற்றின் செயல்பாடுகள் குறித்து மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

போர்க்கப்பல்களை மட்டுமின்றி சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்களின் நடவடிக்கைகளையும் இந்தியா கண்காணித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று திரிபாதி தெரிவித்துள்ளார்.

கடைசியாக, சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த ஆண்டு காணப்பட்டது. பின்னர் அது பாகிஸ்தானின் கராச்சியை நோக்கிச் சென்றது. அதற்குப் பின்னர் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்ததாகத் தகவல்கள் இல்லை என்று திரு திரிபாதி கூறினார்.

குறிப்புச் சொற்கள்