புதுடெல்லி: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியதற்காக இரண்டு தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர். அந்தத் தகவலை சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டனர்.
பிப்ரவரி 19ஆம் தேதி தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லி வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
விரிவான பரிசோதனையில், நான்கு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 27.08 கிலோ எடையுள்ள கஞ்சா என சந்தேகிக்கப்படும் 54 போதைப்பொருள் பொட்டலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருளின் அனைத்துலகச் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ரூ.27.09 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு தாய்லாந்து பெண்களைக் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் டெல்லி விமான நிலையத்தில் சில வெளிநாட்டினர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

