மூன்று ஆண்டுகளில் 27 அனைத்துலக தலைமறைவுக் குற்றவாளிகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

மூன்று ஆண்டுகளில் 27 அனைத்துலக தலைமறைவுக் குற்றவாளிகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

2 mins read
b44c7aa8-4c6c-4a92-a707-848b867ff912
‘ஆப்பரேஷன் ஈஸ்டர்ன் ரீச்’ மூலம் பஞ்சாப் காவல்துறையினர் ஐரோப்பிய நாடான மால்டோவாவில் இருந்து முக்கியக் குற்றவாளி அம்ரித்பால் சிங்கை நாடுகடத்திச் சாதனை படைத்துள்ளனர். - படம்: தினமலர்

புதுடெல்லி: இந்தியாவில் படுகொலை, போதைப்பொருள் கடத்தல், கொள்ளை, ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஹரியானா மாநில சிறப்பு அதிரடிப்படை குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது.

சிறப்புப்படையினரின் முயற்சியால் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட அனைத்துலகத் தேடுதல் வேட்டைகளின் மூலம், 27 தலைமறைவுக் குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானா காவல்துறை தலைவர் சதீஷ் பாலன் தெரிவித்துள்ள தகவலின்படி, 2024 வரை ஐந்து பேரும் 2025ல் ஏழு பேரும் 2026ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 14 பேரும் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அந்த நடவடிக்கைகளுக்காக 144 தேடப்படும் குற்றவாளிகள் என அறிவிக்கும் கைதாணைகள், 54 சிவப்பு எச்சரிக்கைக் குறியீட்டுடனான ஆணைகள், 53 இன்டர்போல் குறிப்புகள் விடுக்கப்பட்டு உலகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும், 93 குற்றவாளிகளின் கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களைத் தடுக்க மின்னிலக்கப் பணம் (கிரிப்டோகரன்சி), வங்கிப் பரிவர்த்தனைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறையினருடன் இணைந்து கூட்டாக இயங்கும் சிறப்பு ஒருங்கிணைப்பு அமைப்பையும் ஹரியானா காவல்துறை உருவாக்கியுள்ளது.

பஞ்சாப் காவல்துறையினரும் ‘ஆப்பரேஷன் ஈஸ்டர்ன் ரீச்’ மூலம் ஐரோப்பிய நாடான மால்டோவாவில் இருந்து முக்கியக் குற்றவாளி அம்ரித்பால் சிங்கை நாடுகடத்திச் சாதனை படைத்துள்ளனர்.

மேலும் 12 குற்றவாளிகளை வெளிநாடுகளில் கைது செய்து இந்தியா கொண்டுவருவதற்கான இறுதிக்கட்ட நடைமுறைகள் தீவிரமாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்