ஜெய்ப்பூர்: உடற்பயிற்சிக்கூடத்தில் 270 கிலோ எடையைத் தூக்க முயன்றபோது, அது தவறி கழுத்தின்மீது விழுந்ததில் 17 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.
யஷ்திகா ஆச்சார்யா என்ற அப்பெண் இந்திய அளவிலான பளு தூக்குதலில் பங்கேற்றவர். கடந்த 2024 அக்டோபரில் கோவாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்.
ராஜஸ்தான் மாநிலம், பிகானெரைச் சேர்ந்த யஷ்திகா உடற்பயிற்சிக்கூடத்திற்குச் சென்று எடை தூக்கி பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அவருடைய குடும்பத்தினர் ஹனுமான்கருக்குச் சென்றுவிட்டனர். பயிற்சியைத் தொடர்வதற்காக யஷ்திகா அங்கு செல்லாமல் பிகானெரிலேயே தங்கிவிட்டார்.
அன்றைய நாள் இரவு உடற்பயிற்சிக்கூடத்திற்குச் சென்று பயிற்சி மேற்கொண்டார் யஷ்திகா. அப்போது, பயிற்றுநரின் துணையுடன், நின்றவாறு தோள்மீது 270 கிலோ எடைகொண்ட ‘பார்பெல்’லை அவர் தூக்க முயன்றார். அப்போது, அது நழுவி அவரது கழுத்தின்மீதே விழுந்தது.
உடனடியாக, அங்கிருந்தவர்கள் எடைகளை அகற்றினர். யஷ்திகாவின் பயிற்றுநர் அவருக்கு ‘சிபிஆர்’ எனும் இதய இயக்க மீட்பு சிகிச்சை அளிக்க முயன்றார். ஆனாலும், அவர் எழவே இல்லை.
‘பார்பெல்’ கம்பி தாக்கியதில் யஷ்திகாவின் பயிற்றுநரும் லேசான காயமடைந்தார்.
யஷ்திகாவின் இரு சகோதரிகளில் ஒருவரும் மாநில அளவிலான பளுதூக்குதல் போட்டிக்குத் தயாராகி வருவதாகச் சொல்லப்படுகிறது.
“சம்பவம் தொடர்பில் யஷ்திகாவின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. ஆயினும், அது குறித்து விசாரித்து வருகிறோம்,” என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

