திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள்

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள்

2 mins read
dad3820a-e4fa-4f05-be2e-49722adffada
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் நாடாளுமன்ற மேலவையில் ஓர் இடமும் வழங்க முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. - படம்: ஏஎன்ஐ

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளுடன் நாடாளுமன்ற மேலவையில் ஓர் இடமும் வழங்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதையொட்டி, கட்சிகளிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைக் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக் கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.

தமிழக வெற்றிக் கழகத்துடனும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானது. காங்கிரஸ் தரப்பில் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்துவதாகக் கூறப்பட்டது.

ஆனால், தமிழக காங்கிரசின் செல்வப்பெருந்தகை, திமுகவுடன்தான் கூட்டணி என்று கூறி வந்தார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 3) திடீரென சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த செல்வப்பெருந்தகை, திமுகவுடன் கூட்டணி உறுதி என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகவும் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

காங்கிரஸ் தரப்பில் கிட்டத்தட்ட 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்ட நிலையில், திமுக 28 தொகுதிகள் தரத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

நாடாளுமன்ற மேலவையில் ஓர் இடம் வழங்குவதாக திமுக கூறியிருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

இந்நிலையில், இறுதியாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் நாடாளுமன்ற மேலவையில் ஓர் இடமும் வழங்க முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

குறிப்புச் சொற்கள்