6 ஆண்டுகளில் 3 திருமணம்: வரதட்சணை கேட்டு மனைவிகளை விரட்டிய ‘பலதார’ மன்னன்

6 ஆண்டுகளில் 3 திருமணம்: வரதட்சணை கேட்டு மனைவிகளை விரட்டிய ‘பலதார’ மன்னன்

2 mins read
c1d8122c-49b9-41a3-b828-d963dd237dfe
உத்தரப் பிரதேச காவலர்கள் தனது மூன்று மனைவிகளை ஏமாற்றிய ஆடவரைத் தேடி வருகின்றனர். - படம்: என்டிடிவி

லலித்பூர்: ஆறு ஆண்டுகளில் மூன்று பெண்களைத் திருமணம் செய்து, வரதட்சணைக் கொடுமையால் அவர்களை நடுத்தெருவில் விட்ட ஆடவரை உத்தரப் பிரதேச மாநில காவலர்கள் தேடி வருகின்றனர்.

இந்த அதிர்ச்சித் தகவல் லலித்பூர் மாவட்ட தலைமை காவல் அதிகாரியின் அலுவலகத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.

அங்குள்ள ஜமுரா மஹி கிராமத்தைச் சேர்ந்த சுனில் குமார் என்பவரால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒன்றாகத் திரண்டு வந்து புகார் அளித்தனர்.

முந்தைய திருமணங்களை மறைத்து, தங்களை சுனில் குமார் ஏமாற்றித் திருமணம் செய்ததாக அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

வரிசைகட்டி நடந்த திருமணங்கள்

காவல்துறை விசாரணையில், 2019ல் சிவானி அஹிர்வாரை முதல் திருமணமும் 2021ல் ராக்கியை இரண்டாவது திருமணமும் 2023ல் ஜோதியை மூன்றாவது திருமணமும் செய்துள்ளார்.

தற்போது சுனில் குமார் நான்காவது திருமணத்திற்கு தயாராகி வந்த நிலையில், இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

“வரதட்சணையாக நகை, பணத்தைப் பறிப்பதே சுனில் குமாரின் ஒரே நோக்கம். திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தி, விவாகரத்து செய்ய வற்புறுத்தி எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார்,” என அந்தப் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

“நான் கர்ப்பமாக இருந்தபோது என்னைக் கொடூரமாகத் தாக்கி வீட்டிலிருந்து விரட்டினார். தற்போது எனது ஒரு வயது மகளுடன் பெற்றோர் வீட்டில் உள்ளேன். இப்போது என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்,” என பாதிக்கப்பட்ட மனைவிகளில் ஒருவரான சிவானி தெரிவித்தார்.

“சுனில் குமார் மீது ஏற்கெனவே ஜகௌரா காவல் நிலையத்தில் வரதட்சணை வழக்கு நிலுவையில் உள்ளது. தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்கத் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று பாபினா காவல் நிலைய அதிகாரி ஜே.பி. பால் கூறியதாக என்டிடிவி ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்