நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, லாரி ஓட்டுநர்களாகப் பணிபுரிந்துவந்த 30 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் நாடுகடத்தப்படுவர்.
அரிசோனா மாநில, யூமா செக்டரில் எல்லைச் சுற்றுக்காவல் படையினர் மே 11-15 நாள்களில் ‘ஆப்பரேஷன் செக்மேட்’ நடவடிக்கையை மேற்கொண்டனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்போரைப் பிடிப்பதே அதன் நோக்கம்.
அவ்வகையில், மொத்தம் 52 பேர் பிடிபட்டனர். அவர்களில் 36 பேர் சரக்கு வாகனங்களை ஓட்டிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த 36 சட்டவிரோத ஓட்டுநர்களில் 30 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்ற அறுவரும் மெக்சிகோ, எல் சால்வடோர், ரஷ்யா ஆகிய நாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவர்களிடம் கலிஃபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன், வெர்ஜீனியா போன்ற மாநிலங்களின் வணிக ஓட்டுநர் உரிமங்கள் இருந்தன. சிலரிடம் எவ்வகை வாகன ஓட்டுநர் உரிமமும் இல்லை.
அவர்களில் பலர் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் இருந்தபோது வழங்கப்பட்ட வேலை அனுமதி ஆவணங்களை வைத்திருந்தனர். ஆனால், அவை தற்போது காலாவதியாகிவிட்டன.
கைதுசெய்யப்பட்டோர்மீது கூட்டரசுச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படுவர் என்று அமெரிக்கச் சுங்க, எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
டோனல்ட் டிரம்ப் இரண்டாம் முறையாக அதிபர் பொறுப்பை ஏற்றபின், தகுதியில்லாத வெளிநாட்டு ஓட்டுநர்கள் வணிக வாகனங்களையும் பேருந்துகளையும் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமம் பெறுவதைத் தடுத்து நிறுத்தும்படி அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சு ஆணை பிறப்பித்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த பல மாதங்களாகவே அமெரிக்காவில் சாலை விபத்துகளை ஏற்படுத்தியதாகக் கூறி இந்திய வம்சாவளி சரக்கு வாகன ஓட்டுநர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டனர்.

